October 15, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி--4

”யார் பண்ண தப்பு என்பதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. இரண்டு தோள் பட்டைகளூம் சரியாக இருக்க வேண்டும். நான் திருவிழா கோமாளி மாதிரி இருக்கப் போவதில்லை. இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் நான் விமான நிலையம் போகப் போகிறேன்.” என்றேன்.

“சார், இது பெரிய பிரச்னையே இல்லை. இடது தோளில் வைத்திருக்கும் பட்டையை எடுத்து வலது தோளில்  தைத்தால்  சரியாகிவிடும்.. உங்க  மத்த டிரஸ்ஸெல்லாம எடுத்துக் கொண்டு ஒட்டலுக்குப் போங்க..’ சூட்’ சரி பண்ணி பையன் கிட்ட கொடுத்து அனுப்பறேன்”என்றான். .
அவனை  நம்பினேன். வேறு என்ன செய்வது.  ஓட்டலுக்கு வந்து காத்திருந்தேன். பன்னிரண்டு மணிக்கு ஐந்து நிமிஷம் இருக்கும்போது விமா நிலையம்போக டாக்ஸியில் என் பெட்டிகளை ஏற்றினேன். ஹென்றியின் பையன் இன்னும் வரவில்லை.
”இன்னும் இரண்டு நிமிஷம் வெய்ட் பண்ணுங்கள்” என்று டாக்ஸி டிரைவரிடம் கெஞ்சினேன். ஐந்து நிமிஷம் பொறுத்து விட்டு டாக்ஸி டிரைவர் ,” இனிமேல் வெயிட் பண்ண முடியாது” என்று சொல்லியபடி காரின் கதவை மூடினார். அந்த சமயம்  ஒரு பையன் வேகம் வேகமாக ஓடி வருவதைப் பார்த்தேன். அவன் கையில் கோட்டுகள் ஒரு மூட்டையாக இருந்தது. மடித்துப் பேக் செய்ய டயம்  இருந்திருக்காது என்று நினைத்தேன்.
’அப்பாடா, கோட்டுகள் வந்தனவே’ என்று சந்தோஷப்பட்டேன். பையனிடமிருந்து கோட்டுகளை வாங்கி மடியில் வைத்துக் கொண்டேன். டாக்ஸி புறப்பட்டது.
*                   *
  விமானத்தில் ஏறி சீட்டில் உட்கார்ந்ததும்’ மற்றவர்கள் பேப்பர் பத்திரிகைகளைப் புரட்ட ஆரம்பித்திருந்தார்கள். எனக்கோ சரி செய்யப்பட்ட கோட்டுகளைப் போட்டுப் பார்க்க வேண்டும் என்பது தீவிரமாக இருந்தது. கோட்டின் இடது தோள்பட்டையைத் தொட்டுப் பார்த்தேன். உள்ளே வைத்திருந்த பேடு எடுக்கப்பட்டிருந்தது. இப்போது இடது தோள் வலது தோளுக்குச் சமமாக வந்திருக்கும் என்று திருப்தி ஏற்பட்டது. ரெஸ்ட் ரூமிற்குப் போய் கோட்டை போட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது.
 அங்கு போனதும் நான் என்ன கண்டுபிடித்தேன் என்று உங்களால் ஊகிக்க முடியுமா  வாஷ்பேஸினுக்கு மேலிருந்த சின்னக் கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது இரண்டு தோள்களும் சரி சமமான உயரத்தில் இருப்பது தெரிந்தது. இடது பக்கத்தில் வைக்கப் பட்டிருந்த பேடுகளை எடுத்துவிடப் பட்டதால் இடது தோள் தொள தொள என்று ஆடிப் போய் விட்டது .
*                                *                           *
அமெரிக்க டெய்லர் எவராலும்  இடது தோளைச் சரி செய்ய முடியவில்லை. யாரிடம் போய் என் பிரச்சனையை சொல்லிவிட்டு கோட்டைப் போட்டுக் காட்டினாலும் அவர்கள் எல்லாரும் செய்தது வீழ்ந்து வீழ்ந்து சிரித்தது தான்! ’எவனோ செய்த கோணாமாணா தையல் வேலையைச் சரி செய்வதற்கு நாங்கள் தயாரில்லை’ என்று சொல்லிவிட்டார்கள்.
”நீங்கள் என்ன சார்ஜ் சொல்லுகிறீர்களோ அதைத் தருகிறேன் சரி பண்ணி கொடுத்து விடுங்கள்” என் றேன் ஒரு டெய்லரிடம்.
”சார் பணம் காசுக்கு ஆசைப்பட்டு சுயமரியாதை, நம்ப தொழில் கௌரவம் எல்லாவற்றையும் விற்றுவிட முடியுமா”  என்று கேட்டார். 
”இப்போ நான் என்ன செய்யறது?”  என்று கேட்டேன்.
”என்ன செய்யறதா?  மறுபடியும் ஹாங்காங்க போக வேண்டியது தான்” என்றார்.
அவர் கண்களில் பரிவு இருந்தது என்று முன்பு சொன்னேனே, அது என் தவறான கணிப்பு!

  பின் கதை:
 இந்த ஏற்றத் தாழ்வு தோள்பட்டைகள் அனுபவத்திற்குப் பிறகு நான் ஒரே ஒரு தடவை தான் ஹாங்காங் போனேன் அதாவது ’தோள் துவண்டார் தோளே துவண்டார்’ சம்பவத்திற்குப் பிறகு.
 அப்படி சென்ற பிறகு டெய்லர்கள் இருக்கும் தெருப் பக்கமே தலை காட்டக் கூடாது என்று சத்தியம் செய்து கொண்டேன்.
                                                                                   (அடுத்த பதிவில் முடியும்)

4 comments:

  1. அவசர அவசரமாக டாக்சியை நிறுத்தி வாங்கி வந்தும் கைக்கு வந்தது தோளுக்கு பொருந்தாமல் போய்விட்டதே. கடைசிப் பதிவில் இவ்வளவு அருமையான டெயலரை எப்படி ஒஸ்தியாகக் காட்டப்போகிறார் என்பதில் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு!

    ReplyDelete
  2. "உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை என்று திட்டினான்" என் நண்பன்,நான் என் துணிகளை எலிஸபத் டெய்லரிடம் தான் எப்போதும் தைப்பதற்கு கொடுப்பேன் என்று பீல் விடும்

    போது !

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_16.html

    ReplyDelete
  3. ’தோள் துவண்டார் தோளே துவண்டார்’
    கோட்டும் துவண்டதே !!

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_18.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ...

    ReplyDelete
  4. வணக்கம்

    நல்ல கலகலப்பாக படைப்பு படைக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் வலைப்பூ வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை பாரக்க கிடைத்தது.
    நேரம் இருக்கும் போது நம்ம வலைப்பக்கமும் வாருங்கள் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -என்றும் அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!