May 27, 2011

ஆகா! புத்தகங்கள்!

ஆகா! புத்தகங்கள்!

புத்தகங்களைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு புத்தகம்  A PASSION FOR BOOKS,
HEROLD ROBNOWITZ மற்றும் ROB KAPLAN ஆகியவர்களால் தொகுக்கப்பட்ட புத்தகம். சில வருஷங்களுக்கு முன்பு வாங்கினேன். 1999ம் வருடம் பிரசுரமான புத்தகம். இந்தப் புத்தகத்தில் உள்ள எல்லா கட்டுரைகளும் லட்டுதான்.
ஒருசில கட்டுரைகளின் தலைப்பை மட்டும் தருகிறேன்.
* பழைய புத்தகக் கடையில்
* என் லைப்ரரி இடம் மாறியபோது
* புத்தக வியாபாரம் துவங்குவது எப்படி
* பிரசுரகர்த்தர்களால் நிராகரிக்கப்பட்ட 10 சிறந்த புத்தகங்கள்
* புத்தகங்களைக் கடன் தருதல்
* வாங்கிச் சென்ற புத்தகத்தை நண்பன் திருப்பித் தந்தது பற்றி...
* கடன் வாங்கிச் சென்ற புத்தகமே, வருக.
* பொது நூலகத்தை எப்படி அமைப்பது?
* சாமுவேல் பில்ஸ் புத்தகசாலை
* பழைய புத்தகங்கள் தரும் சுகம்
* புத்தகப் பைத்தியம்
* அமெரிக்க கேரக்டரை உருவாக்கிய 10 புத்தகங்கள்
* புத்தகங்கள் சேகரித்தல்
* புத்தகங்கள் வெறுமனே சொல்லவில்லை பைத்தியம் என்று
* ஆத்மாவின் ஒளிரல்கள்
* எப்படி வாசிப்பு என் வாழ்க்கையை மாற்றி விட்டது
* சாமர்செட் மாமின் 10 சிறந்த நாவல்கள்
* புத்தகங்களை அக்கறையில்லாமல் வைத்துக் கொள்வது எப்படி?
* இருபதாம் நூற்றாண்டின் 100 சிறந்த நாவல்கள்

பதிப்பாசிரியர்களின் அறிமுக உரையும் அபாரமாக உள்ளது. தமிழில் ஒரு பதிவாகவேப் போடத் தகுதி உடையது.

இப்புத்தகத்திற்கு ரே பிராட்பரி (RAY BRADBURY)  என்ற எழுத்தாளர் முன்னுரை எழுதியுள்ளார். அதை தமிழாக்கம் செய்து தருகிறேன். ரே பிராட்பரி 400 புத்தகங்கள் எழுதியுள்ளார். புத்தகப் பித்தர். இவரைப் பற்றி மேலும் நிறைய விவரங்கள்   விக்கிபீடியாவில் உள்ளன.
 இனி பிராட்பரியின் முன்னுரை: (என் மொழிபெயர்ப்பு சுமாராகத்தான் இருக்கும்! ("தெரிந்தது தானே” - அசரீரி!)
=              =                  =
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் வருடம் ஃபாரன்ஹீட் 451 என்ற என்னுடைய நாவலை  எழுதி முடித்தேன். அதற்கு சில  ஓவியஙகளை என் நண்பரும் ஓவியருமான ரீஜா முக்ரைனியிடம் போட்டுத் தரச் சொன்னேன். நாவலுக்கு ஏற்ற மாதிரியும் அதே சமயம் வித்தியாசமான படமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன். அவர் வரைந்திருந்த சில ஸ்கெட்சுகளைப் பார்த்து நானே ஒரு புதிய ஐடியா தயார் பண்ணினேன்.  ( DON QUIXOTE  என்று வீரர், கவசங்களை (எஃகுக் கவசங்களுக்குப் பதிலாக. நியூஸ் பேப்பரில் செய்யப்பட்ட கவசங்களை) தரித்துக் கொண்டு, எரிந்து கொண்டிருக்கும் புத்தகக் குவியலின் மீது நிற்பது மாதிரி படம் வரையச் சொன்னேன். அது நிஜ கதாபாத்திரம் அல்ல. அந்த வீரன் உண்மையிலேயே நான்தான்! என் சரித்திரமே புத்தகங்கள்தான்! அதைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. அதனால்தான் இங்கே உங்கள் முன்னே இருக்கிறேன் - முன்னுரையாக!

May 23, 2011

நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டிகள் - கடுகு

நான் 1962ல் புதுடில்லி சென்றதும் ஒரு புதிய உலகத்திற்குச் சென்ற உணர்வைப் பெற்றேன். முக்கியமாக அங்கு இருந்த புத்தகசாலை வசதிகளைக் கண்டு அளவு கடந்த உற்சாகத்தை அடைந்தேன். (பின்னால் 1995ல் அன்ட்லாண்டாவில் உள்ள எமரி சர்வ கலாசாலையின் எட்டு மாடி பிரம்மாண்டமான உட்ராஃப் புத்தகசாலைக்குள் நுழைந்த போது ஏற்பட்ட உற்சாகத்திற்கு முன் இது ஒன்றுமே இல்லை.)

டில்லியில் சென்ட்ரல் செகரட்ரியேட் புத்தக சாலை இருந்தது. இரண்டு புத்தகங்கள் எடுத்துச் செல்ல கார்டு கொடுத்தார்கள்.
அங்கு தினசரி பேப்பர் படிக்கச் செல்பவர்கள்தான் அதிகம். ரெஃபரன்ஸ் (இதற்குத் தமிழ் வார்த்தை என்ன?) பகுதியில் பிபிஸி LISTENER, TIME AND TIDE, JOHN O' LONDON,  NEW STATESMAN, PUNCH. LIFE, TIME போன்ற பத்திரிகைகளின் தொகுப்புகள் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும். யாரும் அந்தப் பக்கமே போக மாட்டார்கள். புத்தகசாலை ஊழியர்கள் குறிப்பாக! அதனால் புத்தகங்கள் மேல் தூசு அங்குலக் கணக்கில் படிந்திருக்கும்.
அந்த தொகுப்புகளை எல்லாம் புரட்டிப் பார்ப்பேன். நிறைய கட்டுரைகளைப் படித்தேன். LISTENER பத்திரிகையில் பிரமாதமான கட்டுரைகள்  வரும்.
நியு ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையில் வாராவாரம் ஒரு சுவையான் போட்டி வைப்பார்கள். 1962 வரை சுமார் 2000 போட்டிகள்வந்திருந்தன. (இன்றும் அது தொடர்கிறதை வலைத் தளத்தில் படித்தேன். டிசம்பர் 2010-ல் 4159வது போட்டி வெளியாகி இருக்கிறது.)  வாரம் ஒரு போட்டி,. இது வரை: 4000-த்துக்கு மேல் வந்துள்ளன என்றால் எத்தனை வருஷமாக இந்தப் போட்டிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கணக்குப் பண்ணிப் பாருங்கள்!

இந்தப் போட்டிகள் மிகவும் வித்தியாசமானவையாகவும் இலக்கியத் தரமாகவும் பல சமயம் நகைச்சுவையாகவும் கூட இருக்கும். உதாரணத்திற்கு...
 டிசம்பர் 2010 இதழில் வெளிவந்த போட்டியைப் பாருங்கள்.

Competition No.4159:
The next challenge
Highly paid people often justify their wealth by saying they "work very hard", without mentioning what it is that they do. We would like an account of a highly paid person who works very hard at something totally useless. No bankers, please!


நான் 1960-70 வருடத்தில் வந்த பழைய போட்டிகளை எல்லாம் படித்து ஒன்று இரண்டு ஐடியாக்களை தினமணி கதிரில் வெளியிட்டேன்.
அந்தப் போட்டிகளைப் சிலவற்றை பின்னால் போடுகிறேன்.
இப்போது இங்கு தந்துள்ள போட்டி எண் 4159 ல் கேட்டுள்ளபடி ஒரு குட்டிக் கட்டுரையை எழுத முயற்சி செய்து பாருங்கள்.

 பின்குறிப்பு: இந்த போட்டிக்கு நியூ ஸ்டேட்ஸ்மெனுக்கு வந்த  ஒன்றிரண்டு குட்டிக்  கட்டுரைகளை இரண்டு நாளில் போடுகிறேன்.

May 20, 2011

FOOLISHLY YOURS - சும்மா ரசிச்சுச் சிரிக்க

சில வாரங்களுக்குமுன்   ஏர் இந்தியா பல வருஷஙகளுக்கு முன்பு வெளியிட்ட  FOOLISHLY YOURS, THAT MAKES SENSE ஆகிய இரு சிறு  பிரசுரங்களைப் பற்றி எழுதி இருந்தேன். அந்த  புத்தகத்தை முழுவதுமாக  இங்கு தருகிறேன். இது ஒரு PDF file. இங்கு சொடுக்கிப் படிக்கவும். பின்னால் இரண்டாவது புத்தகத்தையும் தருகிறேன்.

May 19, 2011

சில அரசியல் ஜோக்குகள்!

சில அரசியல் ஜோக்குகள்!

உலகில் சர்வாதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாமல் போய் விடலாம். ஆனால் அவர்களைப் பற்றி ஜோக்குகள் இல்லாமல் போகாது. இதோ சில:
---------
ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் ”தூ’ என்று துப்பினார்..
அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்:
``நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்பிராயம் தெரிவிப்பது தவறு.''
*
ஓர் அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. ``இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்'' கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.'
*
ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. ``என்ன விலை?'' என்று கேட்டார். ``விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை'' என்று கடைக்காரர் குழைந்தார்.
``சேச்சே... இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்'' என்றார்.
கடைக்காரர் உடனே, ``சரி, இதன் விலை இரண்டு ரூபாய்'' என்றார்.
சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, ``அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடுங்கள்'' என்றார்.
*

ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள்.
``என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?''
``ஆமாம்.''
``நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்' என்ற ஜோக்கும்...''
``ஆமாம். என்னுடையதுதான்.''
``இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?''
``அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை'' என்றார் அந்த முதியவர்.
*
குருஷ்சேவுக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. ``இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்'' என்று உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
குருஷ்சேவின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்.
அவரைப் பார்த்து குருஷ்சேவ், ``என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?'' என்று கேட்டார்.
``பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.''
``அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்'' என்றார்.
``ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது'' என்றார் ஜோக் எழுத்தாளர்.
*
பயில்வான் போன்று இருந்தத ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, ``ஏ... என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?'' என்று கேட்டான்.
``நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?'' என்று கர்ஜித்தான் பயில்வான்.
``அதுதானே... எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்...'' என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான்.
*
பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ``அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்...'' என்றாள்.
ஒரு மாணவன், ``டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே'' என்றான்.
டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, ``இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அது கற்பனைதானே! அதுபோல் கடவுளும் கற்பனைதான்'' என்றார்.

May 14, 2011

நாம் ஒன்று நினைக்க... - கடுகு

ஒரு விளம்பரக் கம்பெனியில் நான் பணியாற்றினேன் என்று அடிக்கடி பெருமை அடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.. இந்தப் பதிவு ஒரு விளம்பரம் பற்றிய சுவையான விவரம்.

சுமார் 20 வருஷங்களுக்கு முன்பு நடந்தது.
ஒரு குளிர் பானத்திற்கு வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும், சற்று நகைச்சுவையுடனும் விளம்பரம் எடுக்க வேண்டி இருந்தது. ஒரு மாதிரி யோசித்து எங்கள் ஐடியாவை குளிர்பான நிறுவனத்திற்குக் கொடுத்தோம். அவர்களுக்கும் பிடித்திருந்தது. அதில் சில செகண்டுகளுக்கு அனிமேஷனும் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பம்பாய்க்குப் போனால்தான் படம் எடுக்க முடியும். சவுண்ட் ரிகார்டிங், அனிமேஷன் என்று எல்லாம் அங்கு நடத்துவதுதான் வசதி.

அந்தப் படத்திற்கு ஒரு பெண் மாடல் தேவைப்பட்டார். புதுமுகமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, பல மாடல் ஏஜன்சிகளைத் தொடர்பு கொண்டு, பல போட்டோ ஆல்பங்களைப் பார்த்து ஒரு அழகான மாடலைத் தேர்ந்தெடுத்தோம்.
படமும் எடுத்தோம். எல்லாரும் ஆஹா, ஓஹோ என்று கூறினார்கள். குளிர்பான கம்பெனிக்காரர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
விளம்பரப் படம் வெளியாயிற்று.
வெளியான சில நாட்களுக்குப் பிறகு அந்தப் படம் எவ்வளவு தூரம் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது; அந்த குளிர்பானத்தின் பெயரை எவ்ளவவு பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று அறிய பல ஊர்களில் கண்டறியும் பணியை ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.
அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்:” படத்தில் வந்த மாடல் மிகவும் அழகாக இருக்கிறார் என்று ஒருத்தர் விடாமல் சொன்னார்கள். ஆனால் நூற்றுக்கு இருபத்து ஐந்து பேர்களால்தான் அந்தக் குளிர்பானத்தின் பெயரைக் கூற முடிந்தது. திரும்பத் திரும்ப அந்த பெண் மாடலைப் பற்றித்தான் சொன்னார்கள்.”
இந்த அறிக்கையைப் பார்த்து எங்கள் நிறுவனம் மிகவும் நொந்து போய் விட்டது.
இதில் மற்றொரு சோகம் என்னவென்றால், பல விளம்பர ஏஜன்சிகள் அந்த
மாடல் பெண் பற்றிய விவரங்களை எங்களிடமே கேட்டார்கள். அவர் ஒரு ஸ்டார் ஆகிவிட்டார்!

May 03, 2011

டிராக்டர் வேண்டுமா டிராக்டர் -கடுகு


 ஒரு முன்குறிப்பு:
வழக்கம்போல், பல வருஷங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை எழுதுகிறேன். 
எழுபதுகளில் என்னுடைய அன்றாடப் பணிகளில் ஒன்று ஏதாவது ஒரு புத்தகசாலைக்குப்  போவது. அது என்னமோ புத்தகங்கள் மீது அப்படி ஒரு காதல். அப்படி ஒரு சமயம் டில்லி அமெரிக்கன் லைப்ரரிக்குப் போனபோது ஒரு நகைச்சுவைக் கதைத் தொகுப்பு என் கண்ணில் பட்டது. அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து வந்தேன். அதில்  ஒருகதை நகைச்சுவையாகவும் வித்தியாசமாகவும் எழுதப்பட்டிருந்தது..
’நான் ஒரு டிராகடர் சேல்ஸ்மேன்’ என்ற அந்தக் கதை 1925 வாக்கில் எழுதப்பட்டது. எழுதியவர் வில்லியம் ஹேஸ்லெட் அப்ஸன் ( William Hazlett Uspon - 26 September 1891- February 1975,). அவருடைய மற்ற கதைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. புத்தகசாலையில் அவர் எழுதிய புத்தகம் எதுவும் இல்லை. மனம் தளர்வேனா? : “எழுத்தாளர்கள் --யார் யார்” என்று தலையணை  அளவு கனமானப் புத்தகத்தில் அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் தேடி எடுத்தேன், எனக்கு ஒரு யோசனை தோன்றியது,
அவருக்குக் கடிதம் எழுதி ஒன்றிரண்டு புத்தகங்களை அனுப்பும்படி கேட்டுப் பார்கலாமே என்று தோன்றியது. [அந்த  (கற்) காலத்தில் அரை டாலர் விலையுள்ள புத்தகத்தை அமெரிக்காவிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றாலும், ரிசர்வ் வங்கி  EXCHANGE CONTROL DEPARTMENTக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற்று, வரைவு ஓலை வாங்க வேண்டும். அவர்கள் ஆயிரம் கேள்வி கேட்பார்கள்].
இது மாதிரி, சில எழுத்தாளர்களுக்கு எழுதி, சில புத்தகங்களை வரைவழைத்து  இருக்கிறேன்.  அப்சன் அவர்களுக்கும் எழுத நினைத்தேன். ஒரு வாரம் கழித்து அமெரிக்கன் புத்தகசாலைக்குப் போய் அவர் வீட்டு விலாசத்தை தேடிக் கண்டுபிடித்தேன். அப்போது மேஜை மீதிருந்த நியூ யார்க் டைம்ஸ் தினசரியைச் சும்மா புரட்டினேன். ஒரு மூலையில் இருந்த ‘காலமானார்’ பத்தியா என் கண்ணில் படவேண்டும்? சில தினங்களுக்கு முன்புதான்  அப்ஸன் காலமானார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
           அதன் பிறகு சுமார் 25 வருஷங்களுக்குப் பிறகு அப்ஸ்ன புத்தகம் ஒன்றை விலைக்கு வங்கினேன். பிறகு நார்த் கரோலினா  சர்வகலாசாலை புத்தகசாலைகளில் ( டேவிஸ், லில்லி)   அவர் எழுதிய பல புத்தகங்களைத் திகட்டத் திகட்டப் படித்தேன். சுமார் 100 கதைகள் படித்திருப்பேன். எல்லாம் கடித பாணி கதைகள்தான். தபால்கள் போய் சேரவும் வரவும்  ஒன்றிரண்டு நாளாகி விடும். அதன்படி கதைகளை அமைக்க வேண்டும் .இதற்கு மிகவும் திறமை வேண்டும். The Saturday Evening Post- ல் அவர் கதைகள் பிரசுரமாயுள்ளன.
அவருடய கதாபாத்திரம் அலெக்ஸாண்டர் பாட்ஸ் ஒரு கில்லாடி சேல்ஸ்மேன்.
அவர் கதை ஒன்றை ’தமிழ்ப்படுத்தி’ தினமணி கதிருக்கு அனுப்பினேன். பிரசுரமாயிற்று. அதை இங்கு  தருகிறேன்.
*            *            *                 *

------------                                                                   
                                                                             இந்திர விலாஸ் ஓட்டல்
செங்கல்பட்டு
7.2.66

மானேஜர்,
விவசாயி டிராக்டர் கம்பெனி,
உழுவார்பேட், பெங்களூர்.

அன்புடையீர்,
வணக்கம்.
இப்படியும் அப்படியுமாகப் பார்த்ததில் இன்று இந்தியாவில் தயாராகும் டிராக்டர்களில் உங்கள் `விவசாயி'தான் சிறந்தது என்று கண்டுபிடித்துள்ளேன். ஆகவே, உங்கள் டிராக்டர் விற்பனைக்கு இந்த வட்டாரத்தில்  சேல்ஸ்மேனாக என்னை நியமிக்க உங்களுக்கு முதல் சந்தர்ப்பம் தர விழைகிறேன்.
நான் ஒரு பிறவி சேல்ஸ்மேன். துறுதுறுப்பான மூளை; சாதுரியமான பேச்சு இருக்கிறது. வயது இருபத்தெட்டுதான்; களையான முகம்.
இயந்திர சாமான்களில் எனக்குப் பழக்கம் உண்டு. பாருங்கள், நான் தங்கியிருக்கும் ஓட்டலின் பெயரை! `இயந்திர' என்பதற்குக் கிட்டத்தட்ட நெருங்கிய பெயராக இல்லை? நான் டேராடூனில் ராணுவத்தில் இருந்த போது உங்கள் `விவசாயி' டிராக்டருடன் பழகியுள்ளேன்.
`விவசாயி'யின் சிறப்பை எடுத்துக் காட்டி ஏராளமாக விற்க முடியும். எப்போது வேலையை ஆரம்பிக்கலாம்?
அன்புடன்,
ஏ. கண்ணாமணி.
விவசாய டிராக்டர் கம்பெனி
----------------

பெங்களூர்.
10.2.66
அன்புள்ள திரு.கண்ணாமணிக்கு,
உங்கள் கடிதம். சேல்ஸ்மேன் வேலை எதுவும் தற்சமயம் காலியாக இல்லை. ஆனால் ஒரு மெக்கானிக் அவசரமாக தேவைப்படுகிறது. நீங்கள் விவசாயி டிராக்டருக்கு பரிச்சயமானவர் என்பதால் உங்களை மெக்கானிக்காக நியமிக்கிறோம். மாதம் ஐந்நூறு ரூபாயும் பிரயாணப் படியும் கொடுக்க நிச்சயித்துள்ளோம்.
உடனடியாக எங்கள் சேல்ஸ்மேன் திரு கல்லுளிமங்கனைச் சந்திக்கவும். அவர் அங்கே கஜேந்திர விலாசில் தங்கியிருக்கிறார். அவருடன் அரக்கோணம் சென்று, நாங்கள் அனுப்பியிருக்கும் விவசாயி டிராக்டரை ஓட்டிக் காண்பியுங்கள். திரு.ராஜதுரை என்பவர் ஆர்டர் கொடுத்திருந்தார். நமது சேல்ஸ்மேன் எல்லா விவரங்களையும் கூறுவார்.
இத்துடன் முன் பணமாக ரூபாய் இருநூறு அனுப்புகிறோம்.
இப்படிக்கு,
அசமஞ்சம்
சேல்ஸ் மானேஜர்
=============
செங்கல்பட்டு,
13.2.66.
அன்புள்ள சேல்ஸ் மானேஜருக்கு,
வணக்கம்.
உங்கள் கடிதம் கிடைத்தவுடன் திரு கே.மங்கனைப் பார்க்கச் சென்றேன். என்னைக் கேட்டால் நீங்கள் என்னை மெக்கானிக்காக நியமித்தது உங்கள் அதிர்ஷ்டம் என்பேன். மங்கனுக்கு டெங்கு ஜுரம். ஆஸ்பத்திரிக்குப்  போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அவரை அட்மிட் செய்தேன். அவர் எனக்கு எல்லா விவரங்களையும் கூறினார்.
திரு ராஜதுரைக்கு ஏராளமான நஞ்சை, புஞ்சை நிலம் இருக்கிறது என்றும், சவுக்கு, மா, புளி தோப்புகள் ஏராளம் என்றும் கூறினார். நம் டிராக்டர் உதவியால், வெட்டிய மரங்களை `சா' மில்லுக்கு விரைவாகக் கொண்டு வர விருப்பமாம். ஒரு ரகசியம்: மரப்பலகைகள் விலை சரியப் போகின்றன. உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். பாவம்! பிழைத்துப் போகட்டும்!

May 02, 2011

ஆசிரியருக்குக் கடிதம் -கடுகு

நண்பர் ராகுவுக்கு  உலகில் ஒரே ஒரு ஆசை தான் உண்டு. அது, தம் பெயரை  அடிக்கடி அச்சில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.  கதை, கட்டுரைகள், துணுக்குகள் எழுதிப் பார்த்தார்.  பிரசுரமாகவில்லை.  "ஆசிரியருக்குக் கடிதம்' எழுதினார்.  பிரசுரமாகிவிட்டது.  அதிலிருந்து எல்லாப் பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார்.  ஒரு விஷயம் அகப்பட்டால் போதும் அதை வைத்துக் கொண்டே ஏழெட்டுப் பத்திரிகைகளுக்கு எழுதி விடுவார்.
      சமீபத்தில், "ஓடுகிறாள் ஒரு பெண்' என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தார்.  அன்றிரவு அவர் எழுதித் தபாலில் போட்ட கடிதங்களைப் பார்க்கலாம்.
* "மாதர் மலர்' இதழ் ஆசிரியருக்கு
      "ஓடுகிறாள் ஒரு பெண்' படத்தை உடனடியாகத் தடை செய்ய நீங்கள் குரல் எழுப்ப வேண்டும்.  வயலில் ஏர் உழும் காட்சியில், கதாநாயகன், "ஓடு கண்ணே ஒடு, ஒடு பெண்ணே ஓடு' என்று பாடிக் கொண்டே மாட்டை ஓட்டுகிறானே, அப்படியானால் பெண்கள் மாடுகளா?
"நவீன விவசாயி' ஆசிரியருக்கு
      உலகில் பல நாடுகள் விவசாயத் துறையில் வெகுவாக முன்னேறி வருகின்றன.  ஆனால் நாம் மட்டும் இன்னும் பின்தங்கி, கையில் கப்பரையுடன் வாழ்ந்து வருகிறோம்.  இந்த நிலையில், டிராக்டர் உழவு முறைகளைக் கேலி செய்யும் பிரசாரப் பாடல் ஒரு திரைப் படத்தில் இடம் பெற்றிருப்பது வருத்தத்துக்குரியது.  "ஓடுகிறாள் ஒரு பெண்' என்ற படத்தில் கதாநாயகன் வயலில் ஏர் உழுது கொண்டே பாடும் பாடலில், ""டிராக்டர் வாங்கினவன் திண்டாடுகிறான், பம்பு போட்டவன்  பதறுகிறான், மாடு கட்டி ஏர் உழுதவன் மகிழ்கிறான், ஏற்றம் போட்டு சால் இறைத்தவன் சிரிக்கிறான்' என்ற வரிகள் உள்ளன.  சென்ஸôர் என்ன சார் செய்கிறார்கள்?
"ஜீவகாருண்ய மலர்' ஆசிரியருக்கு
      வாயில்லாப் பிராணிகள் சினிமாவில் நடிக்கும்போது அவைகளை என்ன கொடுமைப்படுத்தினாலும் தங்கள் ஜீவகாருண்ய சங்கம் கண்டு கொள்ளாமல் இருக்குமா?
      "ஓடுகிறாள் ஒரு பெண் என்ற படத்தில் வரும் நாயகன் ஏர் உழுகிறான். பிறகு மாட்டின் மேல் உட்கார்ந்து செல்கிறான்.  தன் வீட்டுக்கு.  அக்காட்சியில் கூர்ந்து கவனித்தால் மாட்டின் கழுத்து நரம்புகள் புடைத்து மாடு அவதிப்படுவதைக் காணலாம்.  இதற்கு தக்க ந்டவ்டிக்கை எடுக்க வேண்டும், அதாவது கதாநாயகர்கள் குண்டாக இருப்பதற்கான் நடவடிக்கை அல்ல. அவர்கள் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்..
"தெய்வீக நெறி' ஆசிரியருக்கு
      பக்தி இல்லாதவர்கள் திரைப்படம் எடுக்கட்டும் தவறில்லை.  ஆனால் புராணங்களையும் இதிகாசங்களையும் அரைகுறையாகப் படித்தவர்கள் படுத்தும் பாட்டை என்னவென்று சொல்வது? சமீபத்தில் "ஓடுகிறாள் ஒரு பெண்' படத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கியம் எனக்கு ஏற்பட்டது.  அதில் கதாநாயகன் ஏர் உழுதுவிட்டு மாட்டின் மேல் உட்கார்ந்து தன் வீட்டுக்குச் செல்கிறான் அப்போது, "கந்தனுக்கு மயில் வாகனம், எந்தனுக்கு நீ வாகனம்என்கிறான்.  அப்படியானால் கதாநாயகன் தன்னைப் பரமசிவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானா? அல்லது பரமசிவனுடைய வாகனம் ரிஷபம் என்பதை மறைக்கப் பார்க்கிறானாஆத்திகர் மனம் புண்படும் இக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்.
"உழவன் பத்திரிகை' ஆசிரியருக்கு
      "ஓடுகிறாள் ஒரு பெண்' படத்தில் கதாநாயகன் வயலில் ஏர் உழுமுன் ஏரை மாட்டுகிறான்.  ஆனால் கலப்பை முனை இல்லாத ஏராக அது இருக்கிறது.  இந்தத் தவற்றைத் திருத்துவார்களா படத் தயாரிப்பாளர்கள்இம்மாதிரி படங்களை எடுக்குமுன் உழவுத் துறை நிபுணர்களைக் கலந்தாலோசித்து இருக்க வேண்டும்,