May 25, 2012

ஏர் இந்தியா -- இன்னும் கொஞ்சம்

ஏர் இந்தியா 1977-ம் ஆண்டு பிரசுரத்திலிருந்து
மேலும் சில போஸ்டர்கள்







May 20, 2012

ஏர் இந்தியா

 ஏர் இந்தியா இப்போது செய்தியில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது,
 ஏர் இந்தியாவிற்கு உலக அரங்கில் பிரமாதமான் இமேஜைக் கொண்டுவந்தவர் 60 களில் சேர்மனாக் இருந்த  எஸ், கே. கூக்கா ( S K KOOKA)  என்கிற திறமைசாலி. நல்ல நகைச்சுவையாளர்.  ஏர் இந்தியா ‘மகாராஜா’வை உருவாக்கியவர்.  ஏர் இந்தியா விளமபரங்களிலும் போஸ்டர்களிலும் நகைச்சுவை மிளிரும். அவர் எழுதி வெளியிட்ட  FOOLISHLY YOURS, THIS MAKES NO SENSE   ஆகிய இரண்டு நகைச்சுவைப் புத்தகங்களைப் பற்றி எழுதி இருக்கிறேன். பார்க்க: http://kadugu-agasthian.blogspot.in/2011/05/foolishly-yours.html 

ஏர் இந்தியா புதிய  வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் போதும்  மற்ற சமயங்களிலும் வெளியிட்ட போஸ்டர்களில் அவருடைய கிரியேட்டிவ் திறமை தெரியும்.

சுயப் பிரதாபத்திற்காக சிறிய இடைவெளி!
நான் ஒரு விளம்பரக் கம்பெனியில் பணியாற்றிவன் என்று எத்தனையோ தடவை ஜம்பமடித்துக் கொண்டிருந்தாலும், புதிதாக இந்த வலைக்கு வந்தவர்களுக்காக ( அதாவது மாட்டிக்கொண்டவர்களுக்காக!) திரும்பக் கூறுவதில்  தப்பில்லை, ( “ஹூம்.. ஏதோ ஒரு நொண்டிச் சாக்கு!:)

நான் ஓய்வு பெற்ற சமயம் எங்கள் கம்பெனியின் சேர்மனாக அவர் இருந்தார்.   ஓய்வு பெற்ற தினம் அலுவலகத்தில் மாலை போட்டு,   பாராட்டிப் பேசி பரிசு கொடுத்தார்கள். என் ஏற்புரையைச் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, விரிவான ஏற்புரையை ஒரு சிறு புத்தகமாகத் தயாரித்து அனவருக்கும் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தை  ஏர் இந்தி யாவின் FOOLISHLY YOURS மாதிரியே தயாரித்திருந்தேன். அதன் பிரதிகளை பம்பாயிலிருந்த படே படே அதிகாரிகளுக்கும் கூக்கா அவர்களுக்கும் அனுப்பி வைத்தேன்,
சரி, இப்போது  கிளைக் கதையிலிருந்து மெயின் கதைக்கு வருகிறேன்.

May 14, 2012

கல்யாணப் பரிசு

 
ஏர் கண்டிஷன் அறையில் பரந்த மேஜைக்கு முன் உட்கார்ந்திருந்த மிஸ்டர் பஞ்சு, மேலே அண்ணாந்து பார்த்தார். மின்சார விசிறி ஐயோ பாவம் என்று தூங்கிக் கொண்டிருந்தது. அது சுற்றவில்லை. ஆனால் பஞ்சுவின் தலை சுற்றியது.
எதிரே மேஜையின் மீதிருந்த லெட்ஜரில் கண்களை ஓட விட்டார். சாரை சாரையாக கட்டெறும்புகள் ஊர்வது போல் எண்கள் லெட்ஜரின் பக்கங்களில் பளிச்சிட்டன.
சிவப்புப் பென்சிலால் சில எண்களின் கீழே கோடு போட்டார். கூட்டிப் பார்த்தார். உதட்டைப் பிதுக்கினார்.
பிரயோசனமில்லை. மாத முடிவிற்குள் இன்னும் பத்து லட்சம் ரூபாய் வேண்டும்! ரூபாய் அல்ல; அவ்வளவு மதிப்பிற்கு இன்ஷுரன்ஸ் பாலிசி பிடித்தாக வேண்டும். பத்து லட்ச ரூபாய் பிடித்தாக வேண்டும்! பெல்லைத் தட்டினார். பல்லைக் காட்டிக் கொண்டு பியூன் கோதண்டம் வந்தான்.
கோதண்டம், கோ அண்ட் கால் சாரங்கன்!
தானத்தில் சிறந்தது நிதானம்என்ற கொள்கை உடையவர் போல ஆடி அசைந்து வந்த சாரங்கன், “சார், கூப்பிட்டீங்களா?” என்று கேட்டார்.
என்னய்யா... நம்ப கோட்டாவை கம்ப்ளீட் பண்ணியாகலை. கொஞ்சங்கூட கவலையில்லாமல் இருக்கீங்க!
நானும் பத்து நாளாக சீஃப் ஏஜண்ட் ஜாவாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சினிமா ஆக்ட்ரஸ் யாரோ அப்பளம் பாக்டரி ஆரம்பிக்கப் போறாங்க. ஐம்பது லட்சம் ரூபாய் செலவிலே...
கேழ்வரகிலே நெய் வடிகிறது என்று சொன்னானாம். நடக்கிற கதையாகச் சொல்லட்டுமய்யா! ஏதோ ஒரு குட்டி நடிகை பின்னால் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திக் கொண்டு இருக்கிறான். அதற்குச் சாக்குப் போக்கு காட்டுகிறானா?”
ஸ்பிரிங் கதவைத் தள்ளிக் கொண்டு பந்து போல் குதித்து உள்ளே வந்தார் சீஃப் ஏஜண்ட் ஜாவா.
ஜாவா, ஐ ஆம் சாரி. பத்து லட்சம் மேக்-அப் செய்தாகணும்.

May 07, 2012

மோனா லிசா


 


உலகப்புகழ் பெற்ற  மோனா லிசா ஓவியத்தைப் பற்றி ஒரு செய்தியைப் பல வருஷங்களுக்கு முன் படித்திருக்கிறேன்.
 பாரீஸில் லூவ்ர் மிஸியத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியம் ஒரு நாள் திருடு போய்விட்டது. இரண்டு வருஷத்திற்குப் பிறகு தான் அது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் படித்திருக்கிறேன்,
ஆனால் அதற்கு மேல் அதைப் பற்றி நான் யோசித்தது கூட இல்லை, உங்களிடம் யாராவது ‘மோனாலிசா ஓவியம் திருடு போய் அப்புறம் அகப்பட்டதாமே?” என்று கேட்டால், “ ஆமாம்..,,இத்தனை பிரபலமான ஓவியம் திருடு போகிற அளவுக்கு அலட்சியமாக இருந்திருக்கிறார்களே. பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்களா?” என்றுதான் கேட்டிருப்பீர்கள்.

அதை விடுங்கள். என் மனதில் எழுந்த ஒரு கேள்வியைச் சொல்லுகிறேன்,
 சரி, இந்த ஓவியத்தைத் திருடியவன் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?அது, அந்த காலத்திலேயே (1911) 50 லட்சம் டாலர்  மதிப்புள்ளது, யார் வாங்குவார்கள்? வாங்கி வீட்டில் வைக்க முடியுமா?  யாரும் வாங்க மாட்டார்கள்  என்று தெரிந்தும் ஏன் அது திருடப்பட்டது?
இது பற்றி  தகவல்களைத்  திரட்டினேன்,

முதலாவது அந்த மியூசியத்தில் இருந்த பல அற்புதமான ஓவியங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அவ்வளவு பிரபலமான  ஓவியமல்ல. பார்க்கப்போனால் அது திருடு போய்  மீண்டும்  அகப்பட்டதால்தான் அதற்குத் திடீர் பிராபல்யம் கிடைத்தது என்கிறார்கள்.
 சுமார் 200 அறைகள் கொண்ட அந்த மியூசியத்தில் அவ்வளவு அதிக பாதுகாப்புகள் கிடையாதாம். திருடு போனதே  தற்செயலாகத்தான் கண்டு பிடிக்கப்பட்டதாம்.
1911’ம் ஆண்டு 21’ம் தேதி  அதை படம் எடுக்க ஒரு போட்டோகிராபர் போனார். வழக்கமான இடத்தில் அது காணவில்லை,  “ “எங்கே மோனாலிசா படம்?” என்று விசாரித்ததும்தான் மியூஸிய அதிகாரிகளுக்கு  படம் திருடு போனது தெரிந்தது!

அதை விற்கமுடியாது என்று தெரிந்தும் யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள்.
பாரிஸில் இருந்த பல ஓவியர்களிடம் போலீஸ் விசாரித்தது. ( பொறமை காரணமாகக்கூட அதைத்  திருடி மறைத்து வைத்திருக்ககூடும். ( ஓவியர் பிக்காஸோவையும் கூட விசாரித்தார்களாம்!)
பல மாதங்கள் வலை வீசியும்ஓவியம்  கிடைக்கவில்லை, ஆனால் அந்த படத்தை பலவித வியாபாரப் பொருளாகச் செய்து நிறைய பேர் விற்க ஆரம்பித்தார்கள்.
போதக்குறைக்கு மோனாலிசா படம் மாட்டப்பட்டிருந்த இடத்தைப் பார்க்க (!) மியூசியத்தில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது!

சுமார் இரண்டு வருடம் கழித்து இத்தாலியில் இருந்த கெரி என்ற  ஒரு ’ஆர்ட்’ வியாபாரிக்கு ஒரு கடிதம் வந்தது.
 “மோன லிசா ஓவியம் இத்தாலி ஓவியர் லியனார்டோ டாவின்சி வரைந்தது. இந்த பொக்கிஷம் இத்தாலிக்குச் சொந்தமானது, பிரான்சில் அது இருக்கக்கூடாது. மோனாலிசா  ஓவியம் என்னிடம் இருக்கிறது. அதை இத்தாலிக்கேத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன், அதற்காக எனக்கு ஒரு சிறிய தொகை  தரவேண்டும்” என்று கடிதத்தில் எழுதி இருந்தது. கீழே ‘லியானார்டோ வின்சென்ஸா” என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது,
அவனுடன் தொடர்பு கொண்டு அவனைக் கெரி சந்தித்தார், ஓரு தொகை தருவதாகச் சொல்லி ஓவியத்தை வாங்கி கொண்டு வந்தார், உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்,

லியானார்டோ வின்சென்ஸா கைது செய்யப்பட்டான். கோர்ட் அவனுக்கு ஒரு வருஷம் சிறைத் தண்டனை கொடுத்தது,
 அதன் பிறகுதான் மோனாலிசாவின் புகழ் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது! 



 -------------------------------------
இங்கு இரண்டு நையாண்டி படங்கள்  1.மோனாலிசா  பார்பி!
2.  மோனாலிசா MAD Magazine