June 05, 2013

அம்மாவுக்கு அட்வைஸ்

அம்மாவுக்கு அட்வைஸ் - கொடுத்தவர்  கென்னடி

சமீபத்தில் சென்னையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழக்கம்போல் ‘அன்னையர் தின விழாவை’ச் சிறப்பாகக் கொண்டாடியது, பெரிய அரங்கில் பிரபலங்களின் அன்னையரைக் கௌரவித்தது.
இந்த வருடம் அப்படி கௌரவிக்கப்பட்ட ஒரு அன்னையும் அவரது மகனும் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். அந்த பிரபலமான மகனைப் பற்றி ஒரு பதிவு போடலாம் என்றால், அவர் அதெல்லாம் கூடாது என்று ‘144’ போட்டு விடுவார். என்பது எனக்குத் தெரியும். ஆகவே ஏதாவது ஒரு அன்னையைப்பற்றி எழுதலாம் என்று எண்ணியபோதுஅமெரிக்க  அதிபராக இருந்த  ஜான் கென்னடியின் அம்மா திருமதி ரோஸ் கென்னடியை பற்றிப் படித்த ஒரு சுவையான தகவல் நினைவுக்கு வந்தது. அவரும் சிறந்த அன்னைதான். இந்த பதிவின் மூலம்  ரோஸ் கென்னடியைக் கௌரவிக்க விரும்புகிறேன்!
+   +      +
 அதிபர் கென்னடியின்  அம்மா   ரோஸ் கென்னடிக்கு 1962 வாக்கில் ஒரு பொழுதுபோக்கு ( ஹாபி)  இருந்தது.  அந்த  ஹாபி:  பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரமுகர்கள்,  கலைஞர்கள் ஆகியவர்களின் ஆட்டோகிராஃப் சேர்ப்பதுதான்.
ஒரு சமயம் சோவியத் பிரதமர் குருஷ்சேவின் கையெழுத்தைத் தன் தொகுப்பில் சேர்க்க ரோஸ் விரும்பினார்.  
குருஷ்சேவிற்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார்.

 குருஷ்சேவும் ரோஸ் கென்னடிக்குத்  தன் கையெழுத்திட்டப் புகைப்படத்தை அனுப்பிவைத்தார்.
“ இந்த போட்டோவில்  குருஷ்சேவின் கையெழுத்து  உள்ளது. அதில் நீயும்
கையெழுத்துப் போட்டால் நன்றாக இருக்கும்” என்று  ஒரு கடிதம் எழுதி
அந்தப் புகைப்படத்தைத் தன் மகன்  ஜான் கென்னடிக்கு   ரோஸ் அனுப்பினார்.
அதைப் பார்த்த கென்னடிக்கு லேசான அதிர்ச்சி.  குருஷ்சேவிற்கு அம்மா கடிதம் எழுதியது எதுவும் அவருக்குத் தெரியாது.
 

அவர் அம்மாவுக்குக்  கடிதம் எழுதினார்: “அன்புள்ள அம்மா.. நீ அனுப்பிய படத்தில் கையெழுத்திட்டு அனுப்புகிறேன்...  ஒரு விஷயம். அயல் நாட்டு அதிபர்களுக்கு இப்படி  புகைப்படம், கையெழுத்து கேட்டுக் கடிதம் எழுதுமுன், எனக்குத் தெரியப்படுத்து.  இப்படி நீ கேட்பது பல்வேறு வியாக்கியானங்களத் தோற்றுவிக்கும். ஆகவே கடிதங்களை அனுப்புமுன் என்னிடம் ‘ஓகே’ வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்  இந்தப் படம் ரசிக்கூடியது மட்டுமல்ல, மிகவும் மதிப்பு மிக்கதும்கூட என்று கூற வேண்டிய அவசியமில்லை!-- அன்புடன்  ஜேக்

கென்னடியின் அம்மா இந்த கடிதத்திற்குப் பதில் எழுதினர். அதில் தன் செய்கைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் லேசான நகைச்சுவையையும் தூவி இருந்தார்.

” டியர் ஜேக்,  உன் கடிதத்தில் நீ எழுதியிருப்பதைப் புரிந்து கொண்டேன். அதை நான் முன்னமேயே சிந்திக்கத் தவறிவிட்டேன். வியன்னாவில் நடைபெற்ற விருந்தில் இரண்டு மெனு கார்டில்  குருஷ்சேவ் கையெழுத்திட்டிருந்தார். அத்துடன் ஜேக்குலினுக்காக ஒரு
கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அந்த சமயம் எடுக்கப்பட்ட படத்தை,
படம் எடுத்த எடுத்த  பத்திரிகையிலிருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டேன். பிறகு படத்தைக்  குருஷ்சேவிற்கு அனுப்பினேன். நான் செய்தது தவறு என்று இப்போது உணர்கிறேன். இனிமேல் இப்படி நடக்காது. ............
நான் ஃபிடல் காஸ்ட்ரோவிற்குக் கையெழுத்து கேட்டு எழுதுமுன் உனக்குத்  தெரிவிக்கிறேன்!” என்று எழுதினார்.

பின்னால் 1974-ல் ரோஸ் கென்னடி  TIME TO REMEMBER  என்ற  புத்தகத்தில்  இந்த அனுபவத்தைக் குறிப்பிட்டு எழுதும்போது ” இந்த
சம்பவத்தை வைத்து பல சமயம் ஜோக்கடித்துச் சிரித்து இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

பின் குறிப்புஒரு சமயம் ரோஸ் கென்னடி,  ஜவஹர்லால் நேருவின் கையெழுத்துக்காக எழுதுவற்கு முன்பு, கென்னடியின் அனுமதியைக் கேட்டார். அதற்குக் கென்னடி “ ரைட், தாரளமாய் செய்” என்று பதில் போட்டாராம்!

8 comments:

  1. தெரிந்திராத விஷயம் (எனக்கு). சுவாரஸ்யமானதும் கூட. நேரு கையெழுத்து போட்டுத் தந்தாரா இல்லையா ரோஸ் கென்னடிக்கு?

    ReplyDelete
  2. அம்மாவுக்கு அட்வைஸ் - கொடுத்தவர் கென்னடி


    அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. உங்கள் புத்தகங்களில் நீங்க கையெழுத்துப் போட்டு அனுப்பியிருந்தீங்க கடுகு சார்! மிக்க நன்றி. (ஹா ஹா பத்தவெச்சுட்டேன்!!) :-)

    ReplyDelete
  4. புதியதொரு விடயம் அறிந்து கொண்டேன்.நன்றி

    ReplyDelete
  5. புதிய தகவல் எனக்கு.. சுவாரசியமும் கூட

    ReplyDelete
  6. சுவாரசியமான விஷயம் தெரிந்து கொண்டேன் உங்கள் பகிர்வு மூலம். நன்றி.

    ReplyDelete
  7. கடுகு சார் எனக்குப் புத்தகங்கள் மட்டும்தான் கொடுத்தார். அவர் கையெழுத்து போடவில்லை. :(

    ReplyDelete
  8. வணக்கம். எனக்கும் உங்கள் புத்தகம் கிடைத்தது. நேற்றுத் தான் யு.எஸ்ஸில் இருந்து வந்தோம். புத்தகம் பத்திரமாக இருந்தது. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. மிக்க நன்றி. எனக்கு அனுப்பிய புத்தகத்திலும் கையெழுத்துப் போடவில்லை! :( :)))))

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!