December 21, 2013

புத்தகங்களும் நானும்-1

புத்தகங்களும் நானும்
(பல பகுதிகளாக நிறைய எழுத உத்தேசம்.)

எனக்கு எப்போது புத்தகப் பைத்தியம் பிடித்தது என்பது தெரியாது. என் அப்பாவிற்குப் பலதரப்பட்ட புத்தகங்கள் மிது ஈடுபாடு உண்டு, இசை, மொழி, வான சாஸ்திரம்.  தெலுங்கு. சமஸ்கிருத புத்தகங்கள், நிகண்டு, நாலாயிரம் என்பவை மட்டுமல்ல, அந்த காலத்தில் TIMES OF INDIA-வின் ஹோம் லைப்ரரி கிளப்பில் சேர்ந்து  Worlds Best Short Stories  போன்ற பல தடிமனான புத்தகங்களையும், அமெரிக்காவிலிருந்து வெளியாகும்  POPULAR SCIENCE  போன்ற பத்திரிகைகளையும்  வரவழைத்தார்; இத்துடன் தியாகராஜர் கீர்த்தனைகள், திலகர் கீதை, அயினி அக்பரி என்று பலதரப்பட்ட புத்தகங்கள். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்ப்பேன். ‘
எதிர் வீட்டிலிருக்கும் என் நண்பன்  வெங்கடேசன் வீட்டில்.வடுவூர்  ‘திகம்பரசாமியார், ஜே. ஆர். ரங்கராஜு நாவல்கள் இருந்தன. அவைகளை கடன் வாங்கி விழுந்து விழுந்து படிப்பேன்.

விகடன், கல்கி வார இதழ்களைத் தேடித் தேடி படிப்பேன். தீபாவளியன்று விடிகாலையில் தீபாவளி மலர்களை படித்தால்தான் பண்டிகை முழுமையடையும்.
அதனால், பணத்தைச் சேர்த்து, செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டால்’  நாராயணனிடம் முன்பணம் கட்டி விடுவேன். பாவம், நாராயணன், அவசரம் அவசரமாகத் தன் வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, தீபாவளி மலரை வீடு வீடாகப் போய்ப் போடுவார். விடிகாலை ஐந்தாவது மணிக்குள் மலரை என் வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
எனக்கு நாராயணன் மீது கொஞ்சம் பொறாமையும் உண்டு. எத்தனைப் புத்தகங்களுக்கு மத்தியில் அவருடைய பொழுது கழிகிறது! காசு செலவில்லாமல் அவர்  எல்லா பத்திரிகைகளையும் படிக்கலாம்.

அட்வான்ஸ் கொடுக்கும் சாக்கில் அவருடைய ஸ்டாலில் உள்ள தமிழ்ப் புத்தகங்களை மேய்வேன். சில சமயம் மாலை வேளைகளில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அவருடைய ஸ்டாலில் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன்.

என் பொறாமை வளையத்திற்குள் இருந்த மற்றொருவர் வாசு(?) என்பவர். வாசு எங்கள் ஊர்க்காரர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக ஸ்டாலை நிர்வகித்து வந்தார். அது சற்று பெரிய ஸ்டால். பல மொழிப் பத்திரிகைகளும், வீக்லி, பிளிட்ஸ், காரவன். போன்ற பத்திரிகைகளும் இருக்கும். எனக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் போக வேண்டிய வேலை வந்தால், சற்று முன்னதாகப் போய்,  பத்து பதினைந்து நிமிஷம் ஸ்டாலில்  இருப்பேன்.

  சென்னை ஜி,பி. ஓ.வில் வேலைக்குச் சேர்ந்த பிறகு பீச் ஸ்டேஷனில் இருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டாலில் வாரம் ஒரு புத்தகமாவது வாங்கி விடுவேன். புலியூர் கேசிகனின் தமிழ் இலக்கிய புத்தகங்கள் (இரண்டு ரூபாய்தான்!), மர்ரே ராஜம் புத்தகங்கள் (ஒரு  ரூபாய்தான்!), சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை, அரு. ராமநாதனின் வெளியீடுகள், அமுத நிலையம் வெளியீடுகள் என்று வாங்கி விடுவேன். ( ஒரு ரூபாய் என்பதே அதிக விலைதான். சென்னை-செங்கல்பட்டு பஸ் கட்டணம் 75 பைசா என்று இருந்த காலம்!)

டில்லி வந்த பிறகு என் அலுவலகத்திலிருந்து மூன்றாவது கட்டடத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்ததை பார்த்த எனக்கு லாட்டிரி பரிசு அடித்த மாதிரி மகிழ்ச்சி ஏற்பட்டது, சில வருஷங்கள் உறுப்பினர் சந்தா எதுவும் இல்லை. பிறகு 15 ரூபாய் என்று வைத்தார்கள்.
சுமார் பத்து நிமிஷ நடை தூரத்தில் சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகமும் இருந்தது. அது ஒரு சுரங்கம். . பல அரிய புத்தகங்கள், பழைய இதழ்கள் எல்லாம் மண்டிக் கிடந்தன. புத்தகங்கள் படிந்திருந்த தூசு. எல்லா புத்தகங்களையும் ‘கனமான’  புத்தகங்களாக ஆக்கி விட்டிருந்தன! அங்கிருந்து  ஒரு சமயம் இரண்டு புத்தகங்கள் தான் எடுத்து வரமுடியும்.

இந்த சமயத்தில் யாரோ ஒரு புண்ணியவான், “ ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய டில்லியில் இருக்கும் தாரியாகஞ்ச் தெருவிற்குப் போயிருக்கிறாயா? தெரு முழுதும் நடைபாதையில் பழைய புத்தகங்கள்தான்” என்றார். முதன் முதலில் போனபோது பிரமித்துப் போனேன்.  டில்லி கேட் எனப்படும் இடத்திலிருந்து துவங்கி ஜம்மா மசூதி வரை போகும்  வீதி. ஒரு பக்க நடைபாதையில் தான் கடைகள் இருக்கும். எதிர்ப்பக்கம் பரிதாபமாகக் காலியாக இருக்கும். 

December 06, 2013

மன்னிக்கவும்

என் கோடிக்கணக்கான வாசகர்களுக்கு ( ”என்னது, கோடியா?“ என்று கேட்பவர்கள், வேண்டுமானால் ஒன்று இரண்டு குறைத்துக் கொள்ளலாம்!).

தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு மேலும் சில நாட்கள் தாமதமாகும். --கடுகு