January 30, 2014

சுட்டியான WITTY வரிகள்

பொன்னை விரும்பும் பூமியிலே, பொன்மொழிகளை விரும்பும் ஜீவன் நான்  பல வருஷங்களாக அவைகளைத்  தேடிப் படித்து நோட்டுப் புத்தகம் நோட்டுப் புத்தகமாக எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் இந்தியன் எக்ஸ்பிரஸில் (?) CHING CHOW  என்ற தலைப்பில் பொன்மொழிகள் கார்ட்டூன்கள் வரும்.   அவைகளை எழுதிக் கொள்வேன். பிறகு புத்தகசாலைகளில் கிடைத்த பல பொன்மொழி புத்தகங்களைப் பார்த்து எழுதிக் கொள்ள ஆரம்பித்தேன். சமீப 15-20 ஆண்டுகளில்  பொன்மொழி, நகைச்சுவை வரிகள், மனதைத் தொடும் வாசகங்கள், சாதுரியமான நையாண்டி  வரிகள் என்று பல புத்தகங்களை வாங்கிச் சேர்த்துவிட்டேன்.
போதாதற்கு இன்டர்நெட்டில் ஆயிரக்கணக்கில் இவை இறைந்து கிடக்கின்றன. அத்துடன்  ஃபேஸ்புக்கிலும் பலர் புகுந்து விளையாடுகிறார்கள்!

சில வரிச் சிரிப்பு புத்தகங்கள்: 20000 Quips - Evan Esar, Wit-Des MacHale, Ultimate Wit - Des MacHale, 10000 One Liners - Henny Youngman,  3400 clever Quotations- Mckenzie, 5000 One liners -Fechtner, Proverbs,Wit and Wisdom -Louis Bremen, Lifetime Speakers' Encyclopedia Vol-I and Vol-II (600 +600  பக்கங்கள்), Quotoon  (இன்னும்  பல!)-  இப்படி சில புத்தகங்களைச் சேர்த்துவிட்டேன்.

நான்  திரட்டியவைகளிலிருந்து கொஞ்சம்:
§   Action don't speak louder than words. They shout.
§   If speaking is silver, listening is gold. 

January 20, 2014

உல்லாசமாவது பயணமாவது - கடுகு

என் அருமை மனைவி கமலா அன்றாடம் நியூஸ் பேப்பரைப் படிப்பாள்
அவள் படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை, என் மனம் ஹிட்ச்காக் படம் பார்ப்பது போல் திக் திக்கென்று சஸ்பென்ஸுடன் அடித்துக் கொள்ளும். மனைவி பேப்பர் படித்தால் அதில் என்ன சஸ்பென்ஸ் என்று நீங்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கு என் மனைவி கமலாவைத் தெரியாது.
              பேப்பர் என்றால் அரசியல், சினிமா, இலக்கியம், விளையாட்டு என்று பல பல செய்திகள் வரும். இவைகளில் எதுவும் என் மனைவியின் கண்களில் படாது. அவள் பார்வைக்கு அகப்படுபவை விளம்பரங்கள்தான். தள்ளுபடி விற்பனை, ஐம்பது சதவிகிதம் விலை குறைவு என்று வரும் விளம்பரங்களை, ஏதோ பகவத் கீதை படிப்பது போல் மிகவும் உன்னிப்பாகப் படிப்பாள். படித்துக் கொண்டு இருக்கும் போதே, "உங்களைத்தான்... பேப்பரைப் பார்த்தீர்களா?'' என்று கேட்பாள்.
              நானும் ஏதோ ஒரு பெரிய ’விபத்து' வரப் போகிறது என்று பயந்து கொண்டே, "என்ன... பேப்பரா? பார்த்தேன், மொத்தமும் சரியாகப் பார்க்கவில்லை'' என்று சொல்வேன்.
              "பில்லா அண்டு ரங்கா ஷாப்பில் பனாரஸ் பட்டுப்புடவை எல்லாம் தள்ளுபடி விலையில் விற்கிறார்கள்.''
              "அப்படியா?''
              "கொட்டை கொட்டையாக விளம்பரம் வந்திருக்கிறதே? கண்ணைத் திறந்து கொண்டு பேப்பரைப் படித்தால் தெரியும். இதோ பாருங்கள்.''
              பொடி எழுத்தில் வரி விளம்பரமாக அந்த "சேல்' விளம்பரம் வந்திருக்கும்.
              "350 ரூபாய் புடவை 150-க்கு கொடுக்கிறான்... 200 ரூபாய் லாபம்'' என்பாள்.
              150 ரூபாய்க்கு வாங்கி 350 ரூபாய்க்கு விற்றால் 200 ரூபாய் லாபம் என்பது, நான் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டது, கமலா படித்தது புதுக் கணிதமோ?

January 13, 2014

என் முன்னுரைகள்-1


1. சேட்டைக்காரன் எழுதிய மொட்டைத்தலையும் முழங்காலும்.
       இது சேட்டைக்காரனின் புத்தகத்திற்கு நான் எழுதும் முன்னுரை. பொதுவாக முன்னுரை என்பது பாராட்டு உரையாகத்தான் இருக்கும். அதுவும் படிக்காமலேயே பல முன்னுரைகள் எழுதப்படுவதும் உண்டு. நானும் சேட்டையின் கதைகளைப் படிக்காமல் இருந்திருக்க வேண்டும். அப்போது அட்டகாசமான பாராட்டுரை எழுதி இருப்பேன். இன்டர்நெட்டில் எதையோ வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சேட்டையின் வலையில் அகப்பட்டுக் கொண்டேன்.
அவரது கதை/கட்டுரைகளைப் படித்தேன். படிக்கப் படிக்க சிரிப்புத் தாங்க முடியவில்லை. வயிற்றெரிச்சலையும் தவிர்க்க முடியவில்லை. பொறாமைதான் காரணம். அவரது சரளமான நடையும், வரிக்கு வரி வரும் நகைச்சுவை வெடிகளும் என்னை அசத்திவிட்டன. பல சமயம் சட்டென்று வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
அதுவும் அவர் அள்ளித் தெளித்திருக்கும் ஏராளமான உபமானங்கள் எல்லாம் சூப்பர். கீழ்ப்பாக்கத்தில் ஐம்பது வருஷம் சர்வீஸ் போட்ட ஆசாமி மாதிரி சிரித்தேன்.
   சேட்டைக்காரனுக்கு சிலேடையும் அனாயாசமாக வருகிறது. தன்னைத்தானே எள்ளி நகையாடுவதும் பிரமாதமாக இருக்கிறது.
அவர் கட்டுரைகளைப் படித்தபோது எனக்குத் தோன்றியது: இந்த ஆசாமி வலைப்பூவில் எழுதக் கூடாது; பொதுஜனப் பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்பது என் கருத்து, அவா, விருப்பம், யோசனை, அறிவுரை, வேண்டுகோள், கட்டளை.
   அவர் கட்டுரைகளிலிருந்து ஒருசில வரிகளை இங்கு தரலாம் என்று பார்த்தபோது அது முடியாத காரியம் என்று உணர்ந்தேன். எல்லா வரிகளும் நகைச்சுவை மணிகள். படித்தேன் என்பதற்குச் சாட்சியாக இருக்கட்டும் என்று ஒன்றிரண்டு கொடுக்கிறேன்.

* வெரிகுட்! இவ்வளவு கோட்டை விட்டும் எங்க ஒட்டகப் பண்ணையிலே முதலீடு பண்ணனும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?”
 “பணத்தை விட்ட இடத்துலேதானே சார் பிடிக்கணும்? சரவணபவனிலே சாப்பிட்டுட்டு வசந்தபவனிலே போயா வாய் கொப்பளிக்க முடியும்?"
*நாளைக்கு வரச்சொல்லும்மா! டயர்டா இருக்கு, நான் கொஞ்ச நேரம் பல்லு விளக்கப்போறேன்!”
*அதாவது, ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு சம்சாரம்னு சொல்ல வந்தேன். என் சம்சாரம் பேரு கோதை, உங்க சம்சாரம் பேரு ராதை!”
* பீர்க்கங்கரணைத் தண்ணித்தொட்டிக்கு பீட்டர் இங்கிலாண்டு சட்டை போட்டுவிட்டது போல, ஆல்ப்ஸ் மலையிலிருந்து உருண்டுவந்த ஐஸ்பாறை போன்று உருண்டையாக ஒருவர் என்னை நெருங்கினார்.
* ”என் வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதமுதலா டம்ளர்லே உப்புமா சாப்பிட்டிருக்கேன்,”  என்று மனைவியை மனமுவந்து பாராட்டியவன்.
*அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்ச நேயர் எப்படி சாப்பிடறது?
* எனது நாக்கு அடைமழை பெய்த ஆதம்பாக்கம் சாலைபோல ஊறத்தொடங்கியது.

    முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்போது சேட்டையை அதிகம் புகழக் கூடாது என்று தீர்மானத்துடன்தான் துவங்கினேன். அவரது நகைச்சுவை என் தீர்மானத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது.
  சேட்டைக்காரனை நான் சந்தித்தது இல்லை; அவருடன் பேசியதும் இல்லை! சேட்டையின் எளிமையான, சரளமான, யாரையும் புண்படுத்தாத, எப்போது படித்தாலும் சிரிப்பு வரவழைக்கக் கூடிய கதை, கட்டுரைகளை நான் எழுதிய கட்டுரைகளைவிட அதிகம் ரசித்துப் படித்தேன்; ரசிகனானேன்
மேலும் பல உயரங்களைத் தொட்டு, கொடிகட்டிப் பறப்பார் சேட்டை என்பதில் எனக்குக் கடுகளவும் சந்தேகமில்லை.
--கடுகு
========================
2.. சுஜாதா தேசிகன் எழுதிய "என் பேர் ஆண்டாள்”
 
முகவுரை  எழுதுவதைப்போல் கஷ்டமான காரியம் எதுவுமில்லை.( அதைப் படிப்பது அதை விடக் கஷ்டமான காரியம் என்பது வேறு விஷயம்!)

புத்தகம் எழுதுபவர்களுக்குபுத்தகம் எழுதி முடித்த பிறகு பொதுவாக ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்: முதலாவதுபுத்தகத்திற்கு என்ன பெயர் வைப்பது? அடுத்தது: யாரிடம் முகவுரை எழுதி வாங்கிப் போடுவது? முதல் பிரச்சினையை அவரே  முட்டி மோதி (மனைவியுடன்?) ஒரு மாதிரிபிரமாதமானத் தலைப்பைத்  தேர்ந்தெடுத்துவிடுவார்.

January 07, 2014

ஆர்ட் பக்வால்ட் என்னும் ஜீனியஸ்

அரசியல் நகைச்சுவை மற்றும் நையாண்டி எழுத்தாளர் ஆர்ட் பக்வால்ட் ஒரு ஜீனியஸ். இரண்டு நாளைக்கு ஒரு கட்டுரை வீத்ம் பல வருஷங்கள் எழுதியவர். பல் வேறு நாடுகளில்  உள்ள  சுமார்  500  தினசரிகளில் அவரது கட்டுரைகள் சிண்டிகேட் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருந்தன.
பல வருஷங்கள் ஹிந்து நாளிதழிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் வெட்டி எடுத்து பல நோட்டுப்புத்தகங்களில் ஒட்டி வைப்பது என் வழக்கம். கட்டுரைகளில் சிற்சில அமெரிக்க விஷயங்கள் புரியாது. இருந்தாலும் நையாண்டியும், சரளமான ஆங்கில நடையும் அவரது ரசிகனாக என்னை ஆக்கிவிட்டன.

நான் டில்லி வந்த பிறகு, தாரியாகஞ்ச் நடைபாதையில் , அவர் எழுதிய  Don't forget to write  என்ற, 1961-ல் வெளியான புத்தகம் கிடைத்தது. அது ஒரு புதையல். காரணம், அதில் அரசியல் கட்டுரைகளை விட பொதுவான நகைச்சுவை கட்டுரைகள்தான் அதிகம். அந்தப் புத்தகத்திலிருந்து பக்கத்திற்குப் பக்கம் நகைச்சுவை. உதிர்வதுடன், புத்தகம் சற்று பழசு என்பதால் பக்கங்களும் உதிரும்!  அதனால் அதை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து இருப்பேன்.)
பின்னால் அட்லாண்டாவில் உள்ள எமரி சர்வகலாசாலை லைப்ரரியில்  மிக மிகப் பழைய புத்தகங்களைப். பாதுகாப்பாக அட்டையில் செய்யப்பட்ட ‘உறைகளில்(SLEEVE) வைத்திருப்பதைப் பார்த்தேன். அது மாதிரி நானும்  ஒரு உறையைச் செய்து வைத்தேன்,  இந்தப் புத்தகத்திலிருந்து சில கட்டுரைகளை மொழிபெயர்த்தேன். அவை தினமணிக் கதிரில் பிரசுரம் ஆயிற்று.
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா போய் வந்து கொண்டிருக்கிறேன். அந்த விஜயங்களின் போது  கிட்டதட்ட 30 ஆர்ட் பக்வால்ட்டின் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கிவிட்டேன்.
 (பல நகைச்சுவை எழுத்தாளர்களை  LARRY WILDE  என்பவர்   பேட்டிகண்டு, அந்தப்  பேட்டிகளைத் தொகுத்துப் புத்தகமாகப் போட்டிருக்கிறார். அதில் ஆர்ட் பக்வால்ட்டியின் பேட்டியும் இருக்கிறது.  அந்தப் புத்தகத்தை 4,5 வருஷங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன்.  காலையில் வீட்டிலேயே பல செய்திதாள்களைப் படிப்பார். பகல் ஒருமணி வாக்கில் வாஷிங்டனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வருவார். தன் செகரட்டரியை அழைத்து ஒரு கட்டுரையை அரை மணி நேரத்தில் டிக்டேட் செய்து விட்டுப் போய் விடுவார். செகரட்டரி அதை டைப் செய்து 200, 300 காபி போட்டோ காபி எடுத்து சுமார் 200, 300  பத்திரிகைகளுக்குத் தபாலில் அனுப்பிவிடுவார்.

January 04, 2014

அன்புடையீர்!

அனைவருக்கும் வணக்கங்களும் புத்தாண்டு வாழ்த்துகளும்.‘கடுகு தாளிப்பு’ துவங்கி  4 வருஷங்கள் ஓடிவிட்டன. 500 பதிவுகள் என்று கூகுள் கணக்குப் பண்ணிச் சொல்கிறது. அந்த கணக்குகளையோ எத்தனை ’ஹிட்கள்’ என்பதையோ நான் அதிக அக்கறை கொண்டு பார்ப்பதில்லை.

படிப்பதும் எழுதுவதும் என் வலது  மூச்சும் இடது மூச்சுமாகக் கருதுகிறேன்.  எவ்வளவு படித்தாலும் திருப்தி ஏற்படுவதில்லை;  தாகம் தீர்வதில்லை,(ஆம், எதற்குத்  தீரவேண்டும்?) எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்றுதான் மனம் குதூகலிக்கிறது! புதுப்புது  புத்தகங்கள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கின்றன.
நான் எழுதுவது யாருக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. என்னைச் சுறுசுறுப்பாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பதிவுகள் போடுவது நானே எனக்கு வைத்துக் கொண்ட வேலை. அந்த வேலையைத் தினமும் செய்து கொண்டிருக்க வேண்டும். லீவு எடுக்க முடியாது. காரணம் நான்தான்  CEO ; நான்தான் ஊழியன்!
பாரபட்சமின்றி வேலைவாங்கும்  CEO நான்;  உண்மையுடன் பணி புரியும் ஊழியனும் நான். இப்படி டபுள் ரோலில் என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு ஆயிரம் கோடி  நன்றிகள்.

பாரதியாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.  ‘தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்... விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்.”   இதை எனக்கு அருளுவதில் உனக்கு ஒரு தடையும் இல்லை என்பதை நிதர்சனமாகக் காட்டி  வருகிறாய். உனக்கோர் ஆயிரம் கோடி  நன்றிகள்.
-கடுகு

அடுத்த பதிவு இரண்டொரு நாட்களில்.