April 30, 2014

அமெரிக்கா :ஒரு லாபம் - ஒரு நஷ்டம் -ஒரு வியப்பு -ஒரு சிரிப்பு


1.ஒரு லாபம்
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகருக்கு ஒரு சமயம் போயிருந்தேன். அங்கு சில நாள் தங்கி  பல இடங்களைச் சுற்றிப் பார்க்கத் திட்டம் என்பதால் ஒரு வாடகை காரை எடுத்துக் கொள்ள விரும்பினோம். விமான நிலையத்திலேயே வாடகைக்கார் கம்பெனி இருந்தது. அங்கு போவதற்கு விமான நிலையத்திற்குள்ளேயே ஓடும் ரயிலில் ஐந்து, ஆறு நிமிஷம் பயணம்  செய்து போகவேண்டும். 
 அங்கு போனோம். ஏராளமான கார்கள் நின்று கொண்டிருந்தன. நிறைய பேர் கார் ’புக்’ பண்ணிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ஒரு கார் புக் செய்தோம்.  “ இதோ ஐந்து நிமிஷத்தில் கார் வந்துவிடும். காரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள் வெயிட்” என்றார் ஒரு பணியாள்.காத்திருந்தோம்.  5. 10, 15 என்று நிமிஷம் ஆயிற்று. காரைக் காணோம். ஆனால் அந்த அந்தப் பணியாள் அவ்வப்போது வந்து பணிவுடன், “ சாரி.. டூ மினிட்ஸ்? என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
சுமார் 20 நிமிஷம் கழித்து, கார் வந்தது. கார் சாவியை எங்களிடம் கொடுத்து விட்டு அந்த அலுவலர். “  சாரி. டிலே ஆகிவிட்டது. காரில் முழு டாங்க் பெட்ரோல் நிரப்பி இருக்கிறது. சாதாரணமாக, காரைத் திருப்பிக் கொடுக்கும்போது முழு டாங்க் பெட்ரோலுடன்தான் கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை.. ஆனால் உங்களை காக்க வைத்ததற்காக உங்களுக்குச் சின்ன சலுகை தருகிறோம். காலி டாங்குடன்கூட காரைத் திருப்பிக் கொடுக்கலாம். இந்த சீட்டைக் காட்டினால் போதும்: என்றார். ‘கிட்டத்தட்ட 100 டாலர் பெட்ரோல் இலவசமாகத் தருகிறார்’ என்ற மகிழ்ச்சியோடு காரை எடுத்துக் கொண்டு போனோம்.

2.ஒரு நஷ்டம்!
சான் ஃப்ரான்சிஸ்கோவில் பல இடங்களைச் சுற்றி பார்த்தோம். 

April 23, 2014

கமலாவும் கம்ப்யூட்டரும்

  
ஒரு சின்ன முன்னோட்டம்
என்னுடைய ’கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’   புத்தகம் 1988-ல் பிரசுரமானது. விலை ரூ.18! அணா, பைசா என்ற வார்த்தைகள் புழக்கத்திலிருந்த   காலத்தில் எழுதப்பட்ட கதைகள் தொகுப்பு. லைப்ரரி ஆர்டர் எதுவும் இல்லாமலேயே, 4.5  மாதங்களில்  விற்று விட்டது.  அதிலிருந்து ஒரு கமலா-தொச்சு கதையைப் போடுகிறேன்.  25-30  வருஷம் ஆனாலும் இன்னும் நகைச்சுவையை ரசிக்க முடியும். இது யாரோ சொன்னது அல்ல. இதைச் சொன்னது நான்தான்!
புத்தகத்தில் போடப்பட்டிருந்த  முன்னோட்டமும் கதையும். 
                                        ----------------------------------
     * கோபம் வந்தால் கமலா வேஸ்ட் பண்ண மாட்டாள். ஒருத்தர்  இல்லாவிட்டால் வேறு ஒருவர் மேல் அதைச் செலுத்தி விடுவாள்.
* தொச்சு மட்டும் பவநகர் சமஸ்தானத்திற்கு திவானாகப் போயிருந்தால், சமஸ்தானம் திவாலாகிப் போயிருக்கும்.
    * கமலா என்னை எத்தனை விதமாகத் திட்டினாலும், "நாசமாகப் போக' என்று திட்டமாட்டாள். காரணம் என் மேல் அவளுக்கு அளவு கடந்த ஆசை
   * ....என்று கமலாவிற்கு ஜிங்-சிக் போட்டேன். வெற்றிகரமான தாம்பத்யத்திற்கு ஆதார சுருதியே ஜிங்-சிக் தான்!
   * கமலா ஹார்மோனியம் வாசிக்க, ஏதோ ஒரு கட்டை சுயாட்சி பெற்று, தன்னிச்சையாக உரிமைக் குரலை எழுப்பியது. கமலாவின் கட்டைக் குரலுக்கு, ஹார்மோனியக் "கட்டை"யின் குரல் எவ்வளவோ தேவலாம்!.
       * கமலா பாடியது கர்நாடக இசை அல்ல. கர்நாடக இ(ம்)சை!
      * "கொள்ளை லாபம்” என்றாள் கமலா. "கொள்ளை போய் விடும் நமக்கு. லாபம் கிடைத்துவிடும் கடைக்காரருக்கு' என்றேன்

###########

கமலாவும் கம்ப்யூட்டரும்

     காலையில்  நான் கையில் பேப்பரை எடுத்தால் என் அருமை மனைவி கமலாவிற்குப் பொறுக்காது.

     "ஏன்னா. . . அடுப்பிலே குழம்பு கொதிக்கிறது. போய் அரை அணாவுக்குக் கொத்தமல்லி வாங்கிக் கொண்டு வாங்கோ. . . '' என்று டூ-இன்-ஒன் (அதிகாரம் ப்ளஸ்  அவசரம்) குரலில் என்னை விரட்டுவாள். அரையணாவிற்குக் கொத்தமல்லி கேட்டால் காய்கறிக்கடைக்காரர் கொத்திக் குதறி விடுவார் என்பது கமலாவுக்கு மட்டும் தெரியாது.

     இல்லாவிட்டால், சமையலறையிலிருந்து கத்துவாள், "பரணிலிருந்து அப்பளக் குழவியை எடுத்துக் கொடுங்கள்'' என்று.  எங்கள் வீட்டில் அப்பளக்குழவியை ஒரே ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவாள் கமலா. டூத்பேஸ்ட் ட்யூபில் கடைசி  கடுகு அளவு "பேஸ்ட்"டை எடுக்கக்  குழவியை அதன் மேல் ஓர் ஐம்பது தடவை ஓட்டி, (ரோடு எஞ்சின் ஏறியது போல் தட்டையாகிப் போகும் வரை)  பேஸ்ட்டை எடுத்து உபயோகிப்பாள்.
அதுவும் இல்லாவிட்டால் பால்காரருடன் சண்டை போட ஆரம்பிப்பாள்,

     "நேற்று முக்கால் ஆழாக்குக் குறைச்சுக் கொடுத்தே. இன்னிக்கு அரை ஆழாக்குச் சேர்த்துக் கொடுத்துடு. ஞாபகம் வைச்சுக்க, இன்னும் ஏழரை ஆழாக்கு நீ பாக்கி.....நாளுக்கு நாள் பால் தண்ணியாயிண்டே போறது. ஹும்..... நான் கத்தி என்ன பிரயோஜனம்...? ஐயா கிட்டே பணம் வாங்கிண்டு போயிடுவே கரெக்டா.... அவர் ஒரு வார்த்தை சொல்லமாட்டார். அவர் அலட்டல் எல்லாம் சமையல் கட்டு வரை தான். . . . '' என்று பால்காரரைத் திட்ட முடியாத கோபத்தை என் பக்கம் திருப்பி விடுவாள்.

        ஒருவிஷயத்திற்குக் கமலாவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கோபம் வந்து விட்டால் அதை வேஸ்ட் பண்ண மாட்டாள். ஒருத்தர் இல்லாவிட்டால் வேறு ஒருத்தர் மேல் அதைச் செலுத்தி விடுவாள்!

     இப்படித்தான் அன்றொரு நாள் அவள் வாதம், விவாதம், விதண்டாவாதம் மூன்றையும் கலந்து நாலு வீடுகள் கேட்கும் அளவிற்கு உரத்த குரலில் பால்காரருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்!

     "எனக்கா கணக்குத் தெரியாது? நான் தான் காலண்டரில் கரெக்டா எழுதிண்டு வர்றேனே! இதோ பார், ஒண்ணாம் தேதி இரண்டரை ஆழாக்கு, காலையில், சாயங்காலம் மூணு ஆழாக்குக் கொடுத்தே. முன்தினம் பாக்கி அரை ஆழாக்குப் போனா, இரண்டரை தான் கணக்கு. அப்புறம் இரண்டாம் தேதி மாடு உதைச்சிட்டுதுன்னு ஒன்பதரை ஆழாக்கு. . . ''

     ஆழாக்கு என்ற வார்த்தையைத் தமிழ்நாட்டில் இன்றும் பாதுகாப்பாகக் கட்டிக் காத்து உபயோகித்து வரும் ஒரே நபர் கமலா தான்.

     போன வருஷம் வரை மூணே காலணா, ஆறே முக்காலணா என்று சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது தான் நயா பைசாவிற்கு வந்தாள். ஆறு மாதம் வரை ஒரு வீசை, அரை வீசை என்று சொல்லி அதற்குக் கிராம் கணக்கில் என்னைக் கேட்டு, காய்கறி, சாமான்கள் வாங்கி வந்து கொண்டிருந்தாள்!

     கமலா-பால்காரர் விவாதம், பேப்பரைப் படிக்க விடாமல் என்னைத் தடை செய்தது. ஆகவே, நான் "என்ன கமலா, பால்காரருடன் போராட்டம்?  உனக்கு ஒரு கம்ப்யூட்டரை வாங்கித் தந்து விடுகிறேன், பால் கணக்குப் பார்க்க'' என்றேன். அந்தக்கணம் என் நாக்கில் சனி குடியேறி இருக்க வேண்டும்!

     "ஆஹா...கம்ப்யூட்டர் தானே...நீங்க தானே...ஹும்... இந்த ஜன்மத்திலே இல்லே...''

     "ஏன் கமலா இப்படி அலுத்துக்கறே?... கம்ப்யூட்டர் வாங்கித் தருவேன். அதை உபயோகிக்க முதலில் கத்துக்கணும். அதுக்குன்னு என்னென்னமோ லாங்கவேஜ் இருக்காம்.''

     "இருந்தால் என்ன... நம்ப வீட்டுக்கு வந்தால், நாம்ப பேசற பாஷையைத் தானா புரிஞ்சுண்டுடறது... இப்போ நாய்க்குட்டி இருக்குது... அது வெள்ளைக்காரங்க வீட்டிலே வளர்ந்தால், "ஸிட்"டுனா உட்காரும். இந்திக்காரன் வீட்டிலே வளர்ந்தால் "பைட்"னா உட்காரும்... எல்லாம் பழக்கற விதத்திலே இருக்கிறது...''

     ''....ஆமாம், ஆமாம். கமலா, நீ சொல்றது ரொம்ப சரி'' என்றேன். (இப்படிச் சொல்லாவிட்டால் இந்த விவாதம் பதினெட்டு நாட்கள் தொடரும், கமலாவிற்குப் பாரதப் போரில் நிறைய ஈடுபாடு உண்டு.)

     "ஊர்லே ஒரு குப்பைத் தொட்டி விடாமல் கம்ப்யூட்டர் காலேஜ் விளம்பரங்களை எழுதியிருக்காங்க. .. எதிலேயாவது சேர்ந்தால், தன்னாலே தெரிஞ்சுண்டுடறது. இது என்ன பெரிய அசுர வித்தையா...?''  என்று கேட்டாள்.
                                                 *                             *
     போதாத காலம் என்று வந்து விட்டால் அது எத்தனையோ விதமாக  வரலாம். ஏன், ஏர் பஸ்ஸிலும் (அமெரிக்காவிலிருந்து என் மருமான் ஸ்ரீதர் உருவில்) அல்லது 17-ஆம் நூற்றாண்டு சைக்கிளிலும் (என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சுவின் உருவில்!) வரலாம். எனக்கு ரொம்பவும் போதாத காலமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே அது இரண்டு உருவிலும் வந்தது.

April 05, 2014

பெரியவா செய்த அற்புதம்

ஒரு கிளியாட்டம் இருந்த பெண்.
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனைப் பற்றி  எத்தனையோ ஆயிரம் புத்தகங்கள் வந்து விட்டாலும், இன்றும் அவரைப் பற்றிய துணுக்குத் தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுமாதிரி தான் காஞ்சி மகா பெரியாவாளைப் பற்றிய பல அரிய தகவல்கள், அனுபவ பூர்வமான சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  இதுவரை வராத ( என்று நினைக்கிறேன்!)  ஒரு வியப்பூட்டும் தகவலை இங்கு தருகிறேன்.

ஆசிரியர் சாவி  பல வருஷங்களுக்கு முன்பு என்னிடம் விவரித்ததை அப்படியே தருகிறேன்..
*            *
 சாவி சொன்னது:
கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்வப்போது போய் என் மன அமைதிக்காக அவரை நமஸ்கரித்து விட்டு வருவது என் வழக்கம். என்னுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் மானேஜரும் வந்திருந்தார்.

நான் எப்போது போனாலும் தனிப்பட்ட முறையில் என் நலத்தை விசாரித்து விட்டு, ஆசீர்வதித்துக் குங்குமம் கொடுப்பார்.

இந்த தடவை போனபோது  வழக்கம்போல் நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார். குங்குமம் கொடுக்கவில்லை. ஏற்கனவே வந்திருந்த பக்தர்கள் அவர் முன்னே அமர்ந்திருந்தார்கள். அதனால் என்னை விசாரிக்கவில்லையோ அல்லது ஏதாவது பக்தி விஷயமாக சிறிய உரை நிகழ்த்தப் போகிறாரோ அல்லது அவர்கள் சென்ற பிறகு ஏதாவது என்னிடம் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவோ என்று எண்ணி ஒரு பக்கமாகத் தரையில் உட்காந்தேன்.

சில நிமிஷங்கள் கழிந்திருக்கும். அப்போது ஒரு .குடும்பம் வந்தது.  அப்பா, அம்மா சுமார் 25 வயதுப் பெண், கூட இரண்டு ஆண்கள் என்று  ஐந்து பேர்.
நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் அழகு கண்ணை பறித்தது.  சிவப்பு என்றால் அத்தனை சிவப்பு. நிறமும், மூக்கும் முழியும்,  களையான முகமும், அடக்க ஒடுக்கமான  பதவிசும் அந்த மண்டபத்தையே பிரகாசமாக்கியதைப் போல் உணர்ந்தேன்.
அவர்கள் பழத்தட்டைப் பெரியவாளுக்கு முன்னே பவ்வியமாக  வைத்துவிட்டு நஸ்கரித்தார்கள்.  பம்பாய், கல்கத்தா போன்ற வெகு தூர இடத்திலிருந்து வந்தவர்கள் போல் எனக்குத் தோன்றியது, பெரியவா அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்கும் குங்குமம் தரவில்லை.

அவர்களும் பெரியவா முன்னே அப்படியே தரையில் அமர்ந்தார்கள். தொடர்ந்து மேலும் பக்தர்கள் வந்து நஸ்கரித்துவிட்டு குங்குமம் வாங்கிக்கொண்டு போனபடி இருந்தனர்.
பெரியவா  எதுவும் பேசவில்லை. நான் அந்த குடும்பத்தினரையும்,  பெண்ணையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பெண்ணின் அழகு முகத்தில் லேசான சோகம் இருப்பதுபோல் எனக்குப் பட்டது.