May 10, 2015

ஒரு வரி - ஒரு ரூபாய்

ஒரு வரி பதில் 
1960 களில், டில்லியில் தபால் துறை அலுவலகத்தில் சர்வதேச  பார்சல் மெயில் அக்கவுண்டிங்க் செக் ஷனில்  நான் பணி புரிந்து கொண்டிருந்தேன்!
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்தவேண்டும்.அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை  இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள்  நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். )  இந்த வரவு செலவு கணக்குகள் சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். ( இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)

இந்த கணக்கு முறை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு வர வேண்டிய தொகைக்கு 'பில்’ அனுப்ப வேண்டும்.  அதே மாதிரி   நமக்கு வர வேண்டிய தொகைக்கு நாம்  'பில்’ அனுப்ப வேண்டும்.
 ஆனால் இங்கிலாந்தைப் பொருத்தவரை இரண்டையும் நாமே செய்யவேண்டும். அதாவது நம்முடைய கணக்கை  நாம் அனுப்புவதுடன், இங்கிலாந்து அனுப்ப வேண்டிய கணக்கையும் நாமே தயார் பண்ணி அனுப்ப வேண்டும், அதை அவர்கள் சரிபார்த்து கையெழுத்துப் போட்டு அனுப்புவார்கள்!  ( அதாவது அவர்கள் செய்யவேண்டிய வேலையையும் நம் தலையில் எந்த தலைமுறையிலேயோ கட்டி விட்டிருந்தார்கள்.!.. சுதந்திரத்திற்கு வந்து இருபது ஆண்டு கழித்தும் வாயை மூடிக்கொண்டு, கையைக் கட்டிகொண்டு, பவ்யமாக அடிமைபோல்  இந்த வேலையை செய்து கொண்டிருந்தோம்.) 

1970-களில் இங்கிலாந்து- இந்தியா கணக்கை '‘செக்’ பண்ணும் வேலை எனக்குத் தரப்பட்டது. ‘வேறு  எந்த நாட்டுக்கும்  தராத சலுகை இங்கிலாந்திற்கு மட்டும் எதற்குக் கொடுக்கவேண்டும் என்று ஏன் யாரும் கேட்கவில்லை. இதை ஏன் நாமே கேட்கக்கூடாது  என்று எண்ணி,  பிரிட்டன் தரப்பு கணக்கை இனி பிரிட்டனே  தயாரித்து அனுப்பும்படி தெரிவித்து விடலாம் என்று ஒரு ஒரு குறிப்பை எழுதி, என் மேலதிகாரிக்கு அனுப்பினேன்.
அந்த ஃபைல் 15 நாள் கழித்து  எனக்குத் திரும்பி வந்தது.