December 30, 2016

புத்தக அபேஸ் : ஒரு ‘சாதனை’யாளரின் கதை

கடை கண்ணிகளில், முக்கியமாக சூப்பர் பஜார், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் ஆகியவைகளில் பொருள்களை கடத்திப்போவது சற்றுச் சுலபம். இப்போது கண்காணிப்பு காமிராக்கள் வந்துள்ளதால் ஓரளவு குறைந்திருக்கக் கூடும்.

புத்தக சாலைகளில் இப்படி நடப்பதும் சகஜம். ஆனால் புத்தகத்தை அபேஸ் செய்பவர்கள் சற்றுப் படித்தவர்கள் என்பதால் இது ஒரு கௌரவமான திருட்டாக (அவர்களால்) கருதப்படுகிறது.
அமெரிக்கா வந்த புதிதில் ஒரு பல்கலைக்கழகப் புத்தக சாலையில் உறுப்பினராகச் சேர்ந்தேன்எனக்குப் பிடித்த சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றை இஷ்யூபண்ணுவதற்குக் கொடுத்தேன்.
அதில் பார் கோடுகள் ஒட்டப்பட்டிருந்ததால் அவற்றை சர் சர்ரென்று தேய்த்து வைத்தார். அவற்றை எடுக்கப் போனேன். ஒரு நிமிஷம் இருங்கள்என்று சொல்லி, அவற்றை எடுத்து புத்தகம் ஒவ்வொன்றையும் மணை மாதிரி இருந்த ஒரு பலகையின் மீது ஒரு செகண்டு தேய்த்துவிட்டுக் கொடுத்தார்கள்.

December 19, 2016

பாசமுள்ள கமலா

  என் அருமை மனைவி கமலா மிகுந்த பாசம் மிக்கவள். பாசமில்லாதவர்கள் உண்டா? இதைப் போய் ஜம்பமடித்துக் கொள்கிறீர்களே? என்று கேட்கும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை. கமலாவின் பாசம் சாதாரணப் பாசம் அல்ல. எல்லாருக்கும் தாய்ப் பாசம், தந்தைப் பாசம், குழந்தைப் பாசம், பேரன், பேத்தி பாசம் என்று இருக்கும். ன் அருமை மனைவி கமலாவுக்கோ மாமியார்ப் பாசம், நாத்தனார்ப பாசம் என இரண்டு எக்ஸ்ட்ரா பாசமும் உண்டு. மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். எந்த மனைவிக்கு மாமியார் மீதும், நாத்தனார் மீதும் பாசம் இருக்கிறது என்று.

நான் சொல்வதைப் படித்து (ஒருவர் சொல்வதைக் கேட்கத்தான் முடியும், படிக்க முடியுமா என்று கேட்காதீர்கள்) நம்பாதவர்களுக்கு ஒரு சில உதாரணங்கள் தருகிறேன்.
எந்தச் சம்பவமானாலும், எந்த விஷயமானாலும் கமலாவிற்கு என் அம்மா மற்றும் என் அக்காவின் ஞாபகம் வராமல் இருக்காது

வார்த்தைக்கு வார்த்தைஉங்க அம்மா, உங்க அக்காஎன்று சொல்லாமல் இருக்க மாட்டாள். (சில சமயம்உங்க அம்மாக்காரி, உங்க அக்காக்காரிஎன்றும் சொல்வாள் என்பதை நான் மறைக்கவில்லை.) சரி, இப்போது பார்க்கலாமா சில சாம்பிள்களை?

December 02, 2016

புள்ளிகள், தகவல்கள்

நகைச்சுவை எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பர் ஒரு சமயம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். பொழுது போவதற்காக தினசரியில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியைப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில அவரால் சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அருகிலிருந்த நர்ஸிடம் “உங்களிடம் ஒரு உதவி வேண்டும். இந்தக் குறுக்கெழுத்துப் போட்டியில் ஒரு வார்த்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்றார். அவள் “வார்த்தைக்கு என்ன க்ளூ கொடுத்து இருக்கிறார்கள்?” என்று கேட்டாள். “ஏழு எழுத்து வார்த்தை. அதில் மூன்று ‘யு’ (U) எழுத்து இருக்கிறது” என்றார்.
நர்ஸ் சிறிது நேரம் யோசித்துவிட்டு “இல்லை சார்...எனக்குத் தெரியவில்லை. அது வழக்கத்தில் இல்லாத UNUSUAL வார்த்தையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றாளாம்.

November 20, 2016

இப்படியா படம் எடுப்பாங்க?

நான் எழுதியதா?
எந்த எழுத்தாளரும் தான் எழுதிய கதை, திரைப்படமான பிறகு அதைப் பார்த்து திருப்தியோ, மகிழ்ச்சியோ அடைய மாட்டார்கள். காரணம் அவர் விவரித்த கதாபாத்திரங்களைப் பற்றி அவருடைய கற்பனையில் தோன்றிய மாதிரி திரையில் இல்லை என்று ஏமாற்றம் அடைவார்கள். படத்தின் இயக்குனர் கதையைப் படித்தபோது எந்த மாதிரி கற்பனை கதாசிரியரின் எழுத்து உண்டாக்குகிறதோ அதைப் பின்பற்றி திரையில் உருவாக்குகிறார்கள். இரண்டு பேருடைய கற்பனையும் ஒத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆனால், தான் நினைத்தபடி கதாபாத்திரம் திரையில் வராதது பற்றி ஏமாற்றம் அடையலாம்; ஆனால் திரைப்பட இயக்குனர் மீது கோபம், வெறுப்பு, எரிச்சல் கொள்ளக்கூடாது.
          தங்கள் கதை படமானபிறகு அதைப் பார்த்துவிட்டுக் கூறிய சில கசப்புக் கருத்துகளை நான் குறித்து வைத்திருக்கிறேன்.
  சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

November 06, 2016

ஹலோ பிரிசிடெண்ட்: ஹலோ வைஸ் பிரிசிடெண்ட்

 ### அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு விழா. ###

முன்னுரை: இப்போது AL ROKER, DEBORAH ROKER என்ற இருவர் (தம்பதியர்) எழுதிய BEEN THERE, DONE THAT புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்.
          இவர்கள் இருவரும் மீடியா உலகில் பிரபலமானவர்கள். இருவரும் சேர்ந்து 16 EMMY AWARDS என்ற விருதைப் பெற்றிருப்பவர்கள்.
 ரோக்கர் NBC-யின் TODAY SHOW நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 30 மில்லியன் பேர் பார்க்கும் நிகழ்ச்சியாம் இது. அவருடைய மனைவி டெபோரா, ABC என்ற நிறுவனத்தின் செய்தியாளர். TALK SHOWக்களும் நடத்தி உள்ளவர். உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்திருப்பவர். GOOD MORNING AMERICA போன்ற பல பிரபல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் புகழ் பெற்றவர்.
          தங்கள் அனுபவங்களையும், அதில் கற்ற பாடங்களையும், இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான குடும்பப் பாங்கான பல அறிவுரைகளையும் சுவையாக, நம்மிடம் நேரில் பேசுவது போல் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள்.   நாற்பது கட்டுரைகள். (ரோக்கர் இருபது , டெபோரா இருபது.)  
மறக்க முடியாத அதிபர் பதவி ஏற்பு விழா என்ற தலைப்பில் ரோக்கர் எழுதிய கட்டுரையை சற்று சுருக்கி, தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.
றக்க முடியாத அதிபர் பதவி ஏற்பு விழா
என்னுடைய ரேடியோ, டிவி ஷோக்களில் பெற்ற 37 வருட அனுபவங்களில், எத்தனையோ மறக்க முடியாத பல நிகழ்ச்சிகளை விவரித்து இருக்கிறேன். பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள், மக்கள் புரட்சிகள், பயங்கரமான SANDY புயல் எனப் பலப்பல.
          ஆறு அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், முதன்முதலாக, ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட விழாவை வாழ்நாளில் நான் காண்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்திராத எனக்கு, அப்படி ஒரு விழாவைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது என்னை அசத்தி விட்டது என்பது உண்மை.

October 26, 2016

THREE Ks

 துணுக்குத் தோரணம்
K -1: குருஷ்சேவ் வந்தபோது
அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள 150 வருட பழைய கல்லூரியின் நூல் நிலையத்திற்கு இரண்டு வருஷத்திரற்கு முன்பு முதல் முறையாகப் போனேன்.  நூல்நிலையத்தில் புத்தகங்களை இங்கேயே படிக்கலாம்; ஆனால் வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது” என்றார்கள்.  

 அது பிரம்மாண்டமான புத்தகசாலை. முதல் நாள் ஒவ்வொரு மாடியாகப் போய், ஷெல்ஃப்களை எல்லாம் ஆசையுடன் தழுவியபடியே, என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்று உத்தேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். சில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு திரும்ப வைத்துவிட்டேன். சில புத்தகங்கள் இருக்கும் ஷெல்ஃப் எண், call number போன்ற விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
   சுமார் மூன்று மணி நேரம் பார்த்துவிட்டு (கால் ஓய்ந்துவிட்டதால்) வீட்டிற்குத் திரும்ப லிஃப்டை நோக்கி வந்தேன். அப்போது ஒரு ஷெல்ஃபில் ஒரு புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். புரட்டிய பக்கத்தில் “குருஷ்சேவ் வந்தபோது” என்கிற மாதிரி தலைப்பில் குட்டிக் கட்டுரை இருந்தது. அதை விரைவாகப் படித்தேன்.
            குருஷ்சேவ் முதன்முதலாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது நடந்த நிகழ்ச்சி. அவர் முதலில் வந்தது சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு.  அங்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹால் கொள்ளாத அளவுக்குப் பத்திரிகையாளர்கள் திரண்டு விட்டார்கள். பலருக்கு  உட்கார இடம் கிடைக்கவில்லை.  ஒரே சள சள சப்தம். குருஷ்சேவ் வருகைக்குக் காத்திருந்தனர். ஆனால் அதுவரை பேசாமல், வம்பளக்காமல் இருக்க முடியுமா?
      

October 15, 2016

சில சமர்ப்பணங்கள்

புத்தகங்கள் எழுதுவதைக் காட்டிலும் கடினமான வேலை, புத்தகத்திற்கு பெயர் வைப்பது! அடுத்து சமர்ப்பணம் எழுதுவது. அதுவும் நகைச்சுவைப் புத்தகமாக இருந்துவிட்டால் சமர்ப்பணமும் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி காரணமாக அந்த வேலை கடினமானதாக ஆகிவிடும்.
சில சமர்ப்பணங்களை  வித்தியாசமான, நகைச்சுவையான, குயுக்தியானவற்றைப் பார்க்கலாம். புத்தகசாலைக்குச்   செல்லும்   போதெல்லாம் புத்தகங்களைப் புரட்டி சமர்ப்பணங்களை மட்டும் குறித்துக் கொள்வேன். இது பல வருடப் பழக்கம்.  சில சமயம் சூப்பர் கருத்துகள் கிடைக்கும்.!
*பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பி.ஜி. வோட்ஹவுஸ், ‘THE HEART OF A GOOF’ புத்தகத்திற்கு எழுதிய சமர்ப்பணம். (1926-ஆம் ஆண்டு வெளியான புத்தகம்).  
      “என் பெண் லியனோராவிற்கு: அவளுடைய தொடர்ந்த பரிவும், ஊக்கமூட்டிய சேவையும் இல்லாதிருந்தால் இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க நான் எடுத்துக் கொண்ட காலம் பாதியாகக் குறைந்திருக்கும்.!” 
    குட்டிக் குறிப்புஇது வோட்ஹவுஸின் பழைய ஐடியாதான்.  1910-ஆம் ஆண்டு அவர் எழுதிய “A GENTLEMAN OF LEISURE”என்ற புத்தகத்திலும்
இதே சமர்ப்பணத்தை,  லியனோராவிற்கு பதில்வேறு ஒருவருடைய பெயரைப் போட்டுஒரு வார்த்தையும் மாறாமல் அப்படியே எழுதியிருக்கிறார்.

October 07, 2016

நேருஜிக்குப் பிடித்த கவிஞர்

 ராபர்ட் ஃப்ராஸ்ட்
அமெரிக்காவின் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ராபர்ட் ஃப்ராஸ்ட். அவரை இந்தியாவில் பிரபலமாக்கிய பெருமை ஜவஹர்லால் நேருவுக்கு உரியது.
         மே, 21 1964 அன்று நேருஜி காலமானார். பகல் இரண்டு மணிக்கு அவர் காலமான தகவல் வந்ததுடன் அலுவலகங்களை இரண்டு மணிக்கு மூடப்போவதாக அறிவிப்பும் வந்தது. அஞ்சலி செலுத்துவதற்காக அவரது தீன்மூர்த்தி இல்லத்துக்குப் போனேன். கூட்டம் சொல்லி மாளாது. கதவுகளை மூடி யிருந்தார்கள். பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நுழைவாயில் அருகிலுள்ள கூடத்தில் உடல் வைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
      என் வீடு மிக அருகில் இருந்ததால் வீட்டிற்குப் போய்விடலாம்; இரவு 1 மணி 2 மணிக்குத் திரும்பி வந்தால் கூட்டம் குறைந்திருக்கும், அப்போது அஞ்சலி செலுத்தலாம் என்று எண்ணி வீட்டுக்குப் போய்விட்டேன்.
     இரவு 2 மணிக்குச் சென்றோம்.. கூட்டம் அதிகம் இல்லை. பத்து நிமிஷத்தில் உள்ளே போய்விட்டோம். நேருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம். அவருடைய அலுவலக அறையைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. யாரையும் வேறு எங்கும் போக விடவில்லை.
            நேரு இறந்த சில நாட்களுக்குள்ளாகவே ஒரு தகவல் பத்திரிகைகளில் வந்தது. அவர் தனது மேஜை மேலிருந்த டயரியில் ஒரு ஆங்கிலக் கவிதையின் நான்கு வரிகளை எழுதி வைத்திருந்ததைப் பத்திரிகைகள் வெளியிட்டன.

September 28, 2016

உண்மை, நம்புங்கள்!

Believe it or not   என் பதிவுகளைப் படிப்பவர்கள், அவை சுவையாக உள்ளன என்றோ, அறுவை என்றோ, சிரிப்பை உண்டாக்கியது என்றோ, கண்ணில் நீரை வரவழைத்தது என்றோ கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யாரும் ‘ரீல் விடுகிறீர்கள்’ என்றோ, ‘சும்மா கதை விடுகிறீர்கள், நம்ப மாட்டோம’’ என்றோ கூறியதில்லை. இந்தப் பதிவில் மூன்று  குட்டித் தகவல்களை, என் வாழ்க்கை அனுபவங்களைத் தருகிறேன். அவை முழுக்க முழுக்க உண்மை என்று முதலிலேயே தெரிவித்துவிடுகிறேன். நம்ப முடியாத அளவு, ஆனால் உண்மைச் சம்பவங்கள்.
1.டான் கீ ஹோட்டே
ரே பிராட்பரி என்ற பிரபல எழுத்தாளரைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதியபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். அதன் சுட்டி: ஆகா! புத்தகங்கள்! அதில் அவர் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அறிமுக உரையைத் தமிழ்ப்படுத்தித் தந்திருந்தேன். 
அந்த உரையில் DON QUIXOTE என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. உச்சரிப்பும் தெரிய வில்லை. ஸ்பானிஷ் மொழி வார்த்தை அது! எதற்கு வம்பு என்று ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். அதை எழுதும்போது இரவு மணி ஏழு.. தினமும் இரவு 7-7.30 மணிக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சியை எல்லாரும் பார்ப்போம். (மற்ற சமயத்தில் டிவியே போட மாட்டோம்.)
 இரவு ஏழு மணி நிகழ்ச்சியின் பெயர்: JEOPARDY. மிகவும் பிரபலமான, மிகவும் பாப்புலரான வினாடி வினா நிகழ்ச்சி. கடந்த 25, 30 வருஷமாக வாரத்தில் ஐந்து நாள் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒரே நாளில் நாற்பதாயிரம்,   ஐம்பதாயிரம் டாலர்,  என்று கூட ஜெயித்திருக்கிறார்கள்.

September 17, 2016

விளம்பர வாசகங்கள்

ஒரு பொருளைத் தயாரிப்பதை விடக் கடினமானது, அதைப் பிரமாதமாக விளம்பரப்படுத்துவது, விளம்பரத்தில் அந்தப் பொருளைப் பற்றி ஒரு குட்டி வாசகம் இருந்தால், அது பலரையும் கவரும்படியாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கவேண்டும்.
            சில வருடங்களுக்கு முன்பு பாப்புலராக இருந்த பல வாசகங்கள் இன்று மறைந்து போய்விட்டன.
            “தொண்டையில் கிச்..கிச்.”, “பேஷ்..பேஷ்..”, “இதை...இதை... இதைத் தா நினைச்சேன்” என்பவை எல்லாம் இப்போதும் உள்ளனவா என்று தெரியவில்லை. அவை இருந்த காலத்தில் பலரின் கவனத்தை அவை கவர்ந்தன என்பதில் சந்தேகமில்லை.
      நான் எழுதிய ஒரு விளம்பர JINGLE, 10-15 வருடங்கள் ரேடியோவிலும் டிவியிலும் சக்கைப் போடு போட்டது. காரணம் அந்த ட்யூன் அவ்வளவு சிறப்பாக அமைந்து விட்டதுதான்.  என் பாடலில் தனி சிறப்பு எதுவுமில்லை.
            இந்த விளம்பரத்தைப் பல மொழிகளில் தயாரித்துத் தர ஒப்பந்தம் செய்யப்பட்ட பம்பாய் நிறுவனம், சென்னை வந்து படப்பிடிப்பை நடத்தியது.
ஒன்றரை வரிப் பாடலுடன் விளம்பரத்தை முடிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஈ. சி ஆரில் படப்பிடிப்பு செய்ய ஏற்பாடு  கொண்டிருந்தார்கள்.

September 08, 2016

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து....

 நான் டில்லியிலிருந்த போது சுமார்  இருபது வஷங்களுக்கு மேல் தினமும் ஸ்டேட்ஸ்மென் தினசரியைத்தான் படித்து வந்தேன். அது கல்கத்தா பத்திரிகையாக இருந்தாலும், டில்லி பதிப்பில், டில்லி செய்திகள் நிறைய இடம் பெறும். அத்துடன் சுப்புடு அதில்தான் இசை விமர்சனங்களை எழுதி வந்தார். மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும்  MONDAY NOTEBOOK என்ற பகுதியில் பல சுவையான துணுக்குகள் தொகுப்பாக வரும்.. அதில் வந்த ஒரு தகவலை முதலில் தருகிறேன்.
" டியூக் ஆஃப் எடின்பரோ ( பிரின்ஸ் ஃபிலிப்) பற்றிய குட்டிச் செய்தி.
ஒரு  சமயம் அவர் ஒரு சேம்பர் ஆஃப்  காமர்ஸின் கூட்டத்தில் பேச சம்மதித்திருந்தார். அது ஒரு பிரபல சேம்பர்.  நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சேம்பரின் தலைவர் தன் வரவேற்புரையில் பிரின்ஸைப் பற்றிக் குறிப்பிட்டபோது பிரின்ஸின் பல திறமைகளை ’ஆஹா’ ‘ ஓஹோ’வென்று விவரித்தார். 

September 01, 2016

’கோல்ட்’வின்னின் பொன்/பென் மொழிகள்


ஹாலிவுட் தயாரிப்பாளர் SAMUEL GOLDWYN (1882-1974) நிறைய ஜோக் அடிப்பார். சிரிப்புப் பொன்மொழிகளை உதிர்ப்பார். (இவற்றைத் தயார் பண்ணிக் கொடுக்கச் சிலரை வேலையில் வைத்திருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு.)அவர் பல வருஷங்களுக்கு முன் STELLA DALLAS என்று ஒரு படம் எடுத்தார். அதில் BARBARA STANWYCK என்பவர் கதாநாயகியாக நடித்தார். 

ஒரு முக்கியமான காட்சியில் கதாநாயகி கண்ணீர் விட்டு அழுதபடியே பேசி நடித்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த கோல்ட்வின்னுக்கும் கண்களில் நீர் கசிந்துவிட்டது. அந்த ஸீன் படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயகியிடம் “நீங்கள் அழுதுகொண்டே நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. இதே காட்சியைத் திரும்பவும் எடுக்க விரும்புகிறேன். இப்போது அழக்கூடாது; ஆனால் பொங்கி வரும் அழுகையைக் கஷ்டப்பட்டு அடக்குவதுபோல் நடித்து வசனங்களைப் பேசுங்கள். பிரமாதமான காட்சியாக அமைந்து விடும்.” என்றார்.
கதாநாயகியும் அப்படியே நடித்தார். அதைப் பார்த்த கோல்ட்வின்னுக்கும் அழுகை பீறிட்டு வந்தது.


இந்தக் காட்சியைப் பற்றிப் பின்னால் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தான் அழுததைச் சொல்லிவிட்டு “இவைதான் என் வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான கணங்கள்” என்றாராம்.
இது எப்படி இருக்கு?
+++++++++
பிடித்த பொன்மொழி  
அவருக்குப் பிடித்த ஒரு பொன்மொழியும் அதைப் பற்றி அவர் எழுதிய சிறிய கட்டுரையையும் இங்கு தருகிறேன்.

உன்னைப் பொறுத்தவரை நீ உனக்கு
உண்மையாக இரு” - ஷேக்ஸ்பியர் .

நான் ஹார்வர்ட் பல்கலை கழகத்திலோ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலோ படிக்கவில்லை என்பது ஊரறிந்த ரகசியம்.
நான் ஒரு தொழிற்சாலை ஊழியராக இருந்தபோது, இரவுப் பள்ளியில் படித்து கற்றுக்கொண்ட சிறிதளவு கல்விதான் என் படிப்பின் அளவு, நான் ஷேக்ஸ்பியரைக் கற்றுணர்ந்த பெரிய மேதை அல்ல.  இருப்பினும்,மேலே குறிப்பிட்டுள்ள அவரது  பொன்மொழியை வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியமான வழிகாட்டி என்று நான் கருதி வந்துள்ளேன். ‘வெற்றிகரமான’ என்று நான் கூறுவதை அந்த வார்த்தை தரும் அர்த்தத்தை நூறு சதவிகிதம் நம்புகிறேன்.
ஹாலிவுட்டில் நான் இருந்த வருடங்களில், நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் நான் கூறிவந்த புத்திமதி ஒன்றே ஒன்றுதான். நடிகை, நடிகர்கள் அவர்களுடைய கால கட்டத்தில் பிரபலமாக இருந்தவர்களைப் போல தாங்களும் இருக்க விரும்புவது, வேறொருவருடைய டைரக் ஷன் பாணியைப் பின்பற்ற டைரக்டர்கள் முயற்சி செய்வது, மிகவும் வெற்றிகரமாக இருக்கும் கதை வசனகர்த்தாக்களைப் போல் எழுத திரையுலக எழுத்தாளர்கள் பிரயத்தனம் செய்வது ஆகிய யாவற்றையும் ஒதுக்கச் சொல்வேன். அவர்களிடம் நான் கூறுவதுண்டு: “நீங்கள் நீங்களாகவே இருங்கள்”