March 28, 2017

அமெரிக்கன் சிப்ஸ்

சந்தடி சாக்கில் கந்தகப் பொடி
அமெரிக்க ரேடியோ மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் LARRY KINGன் பேட்டி நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றவை.
ஒரு சமயம்  Rod McKuen என்ற கவிஞர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். அவருடைய கவிதைப் புத்தகம் அதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் பிரசுரமாகியிருந்தது. நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் அவர் Larry King இடம், “இந்தப் பேட்டி நிகழ்ச்சியின் போது என் புதிய கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எதுவும் கூறப் போவதில்லை.” என்றார். ஆனால் நிகழ்ச்சியின் போது தன் புத்தகம் பற்றிஒரு சின்ன அறிவிப்பைச் செய்து விட்டார்.
அவர் சொன்னது: என்னுடைய புதிய கவிதைப் புத்தகம் வெளிவந்துள்ளது. அந்தப் புத்தகத்தை வாங்கி அட்டையின் ஒரு மூலையை வெட்டி எடுத்து எனக்கு அனுப்புபவர்களுக்கு என்னுடைய சமீபத்திய இசைத்தட்டை இலவசமாக அனுப்பி வைப்பேன்.
நுணலும் தன் வாயால் கெடும். கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துப் பதினைந்தாயிரம் (2,15,000) ரிக்கார்டுகளை அனுப்ப வேண்டி வந்ததாம். புத்தக விற்பனையில் கிடைத்த ராயல்டி தொகை வெறும் சோளப் பொறியாகி விட்டதாம். பாவம், கவிஞர்!
காபியா? அவரா? சாப்பிட்டாரா?
சேஸ் அண்ட் சேன்பர்ன் ஹவர் என்ற கதம்ப நிகழ்ச்சி. 1930/40களில் பிரபலமான ரேடியோ நிகழ்ச்சி.

பயங்கர பாப்புலரான நிகழ்ச்சி. ஒரு சமயம் நிகழ்ச்சியை அறிவித்தவர் ஒரு அறிவிப்பைச் செய்தார். “சாமுவேல் ஜான்சன் ஒரு நாளைக்கு 24 கப் காபி சாப்பிடுவாராம். அவர் மட்டும் சேஸ் அண்ட் சேன்பர்ன் தயாரிப்பை வாங்கிப் பருகியிருந்தால் இதைவிட அதிகம் காபி சாப்பிட்டிருப்பார்என்று கூறினார்.
அவ்வளவுதான், நூற்றுக்கணக்கான நேயர்கள் ரேடியோ நிலையத்திற்குப் போன் செய்து,“டாக்டர் சாமுவேல் ஜான்சன் டீதான் சாப்பிடுவார், காபி அல்ல.” என்று தவறைச் சுட்டிக் காட்டினார்களாம்
மெரிலின் மன்றோ
கவர்ச்சி நாயகியாகத் திகழ்ந்த மெரிலின் மன்றோ வாரத்தில் ஐந்து நாட்கள்தான் சைக்யாட்ரிஸ்ட்டைப் பார்க்கப் போவார். வாழ்க்கையில் அவருக்குப் பல அழுத்தங்கள். மெரிலின் மன்றோ தனதுஉயிலில் அவருக்குத் தன் சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைத்து விட்டார்.
(பலருக்குத் தெரிந்திருக்காது Seven Year Itch என்ற படத்தில் துணை நடிகையாக அவர் நடித்திருக்கிறார். அவர் பெயரை துணை நடிகை பட்டியலில் போட்டு விட்டார்கள்.)
எட்டி கான்டரின்போதுமடா சாமி
எட்டி கான்டர் அமெரிக்க காமெடி நடிகர். 1930கள் வாக்கில் ரேடியோவிலும் திரைப்படங்களிலும் நடித்துப் பிரபலமானவர். அவரது Chase and Sawboru Hour என்பது பிரபலவெரைட்டி ஷோ. ஞாயிறு மாலைகளில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். பாதி அமெரிக்கா இந்நிகழ்ச்சியின் ரசிகர்களாக இருந்தார்கள்.
எட்டி கான்டர் தனது நாற்பதாவது பிறந்த தினத்தன்று நிகழ்ச்சியில், “இன்று என்னுடைய நாற்பதாவது பிறந்த தினம். எனக்கு சாக்லேட் கேட் மிகவும் பிடிக்கும்என்று சொன்னதுடன், தன் ஷர்ட் மற்றும் சாக்ஸ் அளவுகளையும் சொன்னாராம். அடுத்த சில தினங்களில் அவருக்குக் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் பரிசுப் பாக்கெட்டுகள் ரசிகர்களிடமிருந்து வந்து விட்டனவாம். (ஆதாரம் : Canned Laughter- Peter Hay)
எட்டி கான்டருக்குப் போதும் போதும் என்றாகி விட்டதாம்.
அட்டகாசமான ஐடியா
அமெரிக்க நகைச்சுவை நடிகர் எழுத்தாளர் GROUCHO MARX பற்றிதாளிப்புவில் இரண்டு மூன்று பதிவுகளில் எழுதியுள்ளேன்.
மார்க்ஸ் எழுதிய கடிதங்களின்  தொகுப்பை அமெரிக்க பாராள்ன்று புத்தகசாலையில் கேட்டு வாங்கி காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள்.
அவர் கடைசியாக எடுத்த திரைப்படம் LOVE HAPPY. 1949ல் எடுக்கப்பட்டதுஅதைப் பற்றி ஒரு சுவையான தகவலைச் சொல்வதற்கு முன்பு சிறிய முன்னுரை தேவைப்படுகிறது.
    திரைப்படம் எடுப்பவர்கள், திரைப்படத்தில் மறைமுகமாக சில விளம்பரப்பொருள்களைக் காட்டி அதற்கு அந்தப் பொருள்களின் தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி விடுவார்கள். உதாரணமாக ஹீரோயின் கண்ணாடி முன் உட்கார்ந்து அலங்காரம் செய்து கொள்வது போன்ற காட்சியில் டிரஸ்ஸிங் மேஜை மீது பவடர், சோப், ஹேர் ஆயில் ஆகியவைகளைக் காட்டும் போது (தேவையில்லா விட்டாலும் அவற்றைக் காட்டுவார்கள்.) எந்தக் கம்பெனி 50,000 ரூபாய் கொடுக்கிறதோ அந்தக் கம்பெனியின் பொருள்களை மட்டுமே அங்கு வைப்பார்கள். பல விளம்பரக் கம்பெனிகளும் திரைப்படத் தயாரிப்பாளர்களை அணுகி, தாங்கள் தயாரிக்கும் பொருள்களை படத்தில் காட்டச் சொல்வார்கள். அதற்காகப் பணமும் கொடுப்பார்கள். இது எல்லா நாட்டிலும் நடக்கிற விஷயம்.
   Grouchoவும் இந்த உத்தியைக் கடைப்பிடிக்க விரும்பினார். காரணம், பணப் பற்றாக்குறையினால் LOVE HAPPYயை முடிக்க முடியவில்லை. ஒன்றிரண்டு மறைமுக விளம்பரம் மூலம் கிடைக்கும் பணம் போதாது என்பதால், நிறைய விளம்பரங்கள் வருவதற்குத் தோதாக ஒரு சீனை அமைத்தார்.
ஒரு பஜார் சீன். படத்தின் சில கதாபாத்திரங்கள் அந்தக் கடைத்தெரு கடைகளின் கூரையில் குதித்து ஓடுவது போல் காட்சி திட்டமிட்டார். கடைகளின் கூரைகளில் நியான் விளம்பரங்களைச் சுற்றி, கடைக்குக் கடை தாவி ஓடச் செய்தார். இப்படி அவர்கள் ஓடியது பத்து, பதினைந்து கடைகளின் பெயர் திரையில் வந்ததாம். இதற்காக மிகமிக நீளமான காட்சியாகச் செய்து விட்டார். பணப் பிரச்னையையும் சமாளித்து விட்டார். Groucho கில்லாடி தான்.
வார்த்தைக்கு ஒரு டாலர்
பல வருடங்களக்கு முன்பு படித்தது. பிரபல எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் THE OLD MAN AND THE SEA என்ற நாவலுக்கு அதைப் பிரசுரித்த நிறுவனம் வார்த்தைக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் சன்மானம் கொடுத்ததாம்.(இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாக வந்தது என்று என் நினைவு)
இதை மிஞ்சிய சாதனையைச் செய்தவர் : RUDYARD KIPLING. இவர் JUST 50 STORIES-க்கு அதைப் பிரசுரித்த ’லேடீஸ் ஹோம் ஜெர்னல்’, வார்த்தைக்கு ஐந்து டாலர் என்ற கணக்கில் சன்மானம் வழங்கியதாம்
(இது தொடர்பான ஒரு துணுக்கை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.)
கிப்ளிங்கிற்கு இப்படிச் சன்மானம் வழங்கப்பட்ட தகவல் வெளியான சமயம் ஒரு குறும்புக்கார வாசகர், கிப்ளிங்கிற்கு ஒரு ஐந்து டாலரை அனுப்பி ஒரு வார்த்தை எழுதி அனுப்பும்படி கேட்டுக் கொண்டாராம். அதற்கு கிப்ளிங் எழுதிய பதில் :
அன்புடையீர், நன்றி. கிப்ளிங்க்.
இந்தத் துணுக்கின் இரண்டாம் பாகம் :
அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வாசகர் சில நாள் கழித்து கிப்ளிங்கிற்கு எழுதிய கடிதம் : "அன்புள்ள கிப்ளிங்க், உங்கள் ஒரு வார்த்தைப் பதிலை ஒரு பத்திரிகைக்கு200 டாலருக்கு விற்று விட்டேன். அதில் பாதித்  தொகையை இத்துடன் அனுப்பியுள்ளேன்."
மொறுமொறு பிஸ்கட்
1912- ல் மூழ்கி   விட்ட டைட்டானிக் கப்பலிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஒரு பயணியின் கைப்பை இப்போது எடுத்தார்கள்.அந்தக் கைப்பையில் ஒரு சிறிய பிஸ்கட் பொட்டலம் இருந்தது. அப்படியே மொறுமொறு என்று இருந்ததாம். அந்தக் கைப்பையை ஏலம் விட்டார்களாம்.அசந்து போகாதீர்கள், இருபத்து மூன்றாயிரம் டாலருக்கு விலை போயிற்றாம்(டைம் இதழ், நவம்பர் 9, 2015).
இரண்டு முடிவுடன் ஒரு படம்
1939ல் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்திற்கு இரண்டுவித முடிவுடன் வெவ்வேறு வசனங்களுடன் படம் பிடித்தார்கள். சென்சார் வெட்டி விடுவார்களோ என்ற பயம்தான் காரணம். டயலாக் ஒரு மாதிரி இருந்ததால் வேறு டயலாக்கைப் போட்டு இரண்டாவது முடிவைப் படமாக்கினார்கள்
சரி, அப்படி என்ன ஆட்சேபகரமான டயலாக்? Frankly, my dear I don't give a damn! 
இதை எப்படி மாற்றினார்கள்? Frankly. my dear. I Just don't care! 
36 டிரஸ்
GONE WITH THE WIND திரைப்படத்தில் CLARK GABLE முப்பத்தாறு டிரஸ் போட்டுக் கொண்டாராம்.

8 comments:

  1. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் சொற்றொடர் 'சந்தடி சாக்கில் கந்தகப் பொடி'யைப் பார்த்தேன். உங்கள் கதைகள் நினைவுக்கு வந்தன.

    எல்லாத் துணுக்குகளும் ரசிக்கும்படி இருந்தன (கடைசி ஒன்றைத் தவிர)

    க்ரௌசோ செய்ததைத்தான் தமிழிலும் நிறைய படங்களில் செய்கிறார்களே. அதிலும் 'ஐ'யில் ஒரு பாடலில் அப்படி விளம்பரம் செய்வதால் அந்தப் பாடலையே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதில்லை (ஐல ஐல என்று ஞாபகம்)

    மேடம் துஸ்ஸாட் எப்போ போனீர்கள்? உங்கள் முழுப் படத்தையும் போட்டிருக்கலாமே.

    பிஸ்கட்டைக்கூட சாப்பிட்டுப் பார்த்தார்களா? ANTIQUE என்ற பெயரில் எதைத்தான் வாங்குவது (கைப்பை) என்று விவஸ்தையில்லாததுபோல் தெரிகிறது.

    கலவையான ரசிக்கும்படியான செலக்ஷன்.

    ReplyDelete
  2. என் படத்தை போட்டால் எனக்குப் பெருமை. ஆனால் அவருக்கு? -கடுகு

    ReplyDelete
  3. Excellent writings from the great Writer.
    K.Ragavan
    Bengaluru

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    சாயங்கால வேளையில், சுடச் சுட காபியுடன், மொறு மொறு பிஸ்கட்டும் மிக்ஸரும் சாப்பிட்ட மாதிரி, ஒரு சுவையான பல்சுவைப் பதிவு.

    நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. எல்லாமே அருமையான தொகுப்பு! நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  6. எல்லாருக்கும் நன்றி

    ReplyDelete
  7. சுவையான தொகுப்பு.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  8. சுவையான தொகுப்பு . வித்யாசமான செய்திகள். :)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!