July 26, 2017

ஓ, மை GOD!

TIME பத்திரிகையின் இதழ்களில் வந்தவை)

காஸ்ட்ரோவின் சாதனை!
நீண்ட பேச்சுத் திறத்திற்கு  ஃபிடல் காஸ்ட்ரோவை யாரும் மிஞ்சவில்லைகின்னஸ் புத்தகத்தில் மிக நீண்ட உரை நிகழ்த்தியவர் என்று காஸ்ட்ரோவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. 1986-இல் ஹவானாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டில் 7 மணி 10 நிமிஷம் நேரம் பேசினாராம்!
காஸ்ட்ரோவின் மினி சாதனை!
பல வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். புது டில்லி விக்யான் பவனில் ஏதோ ஒரு உலக மகாநாடு. பல நாடுகளி-ருந்து பிரதமர்கள் வந்திருந்தனர். கியூபாவிலிருந்து காஸ்ட்ரோ வந்திருந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவரை கைகுலுக்கி வரவேற்றார். காஸ்ட்ரோ என்ன செய்தார் தெரியுமா? இந்திரா காந்தியைக் கரடிப்பிடியாகப் பிடித்து கட்டிக் கொண்டார். இந்திரா காந்தியினால் கழண்டு வர முடியவில்லை. நெளிந்து  பார்த்தார். முடியவில்லை.
நாற்காலியா, சிம்மாசனமா?
ஹாரி பாட்டர் கதைகள் எழுதி, இங்கிலாந்து ராணியை விட பணக்காரியாக ஆகிவிட்ட J.K.Rowling உபயோகித்த நாற்காலியை ஏலம் விட்டார்களாம். என்ன விலைக்குப் போயிற்று தெரியுமா? மூன்று லட்சத்து தொண்ணூற்று நாலு ஆயிரம் டாலர்களுக்கு! அது என்ன மந்திரசக்தி வாய்ந்த நாற்காலியா?
கால் காசு
1970-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்
டாலர் நாணயம் e-bay-இல் விலைக்கு வந்தது. அதை முப்பத்து ஐந்தாயிரம் டாலரைக் கொடுத்து ஒருத்தர் வாங்கி இருக்கிறார்!  (ஒரு காசு பெறாத கால் காசுக்கு  இவ்வளவு விலையா?).
மூடிகள், கோடிக்கணக்கில்...
ஆஸ்திரியா நாட்டில் ஒருவர் "பியர்' பிரியர்... இல்லை... இல்லை... "பியர்' மூடிகள் பிரியராம். அவர் புட்டி மூடிகளைச் சேர்க்க முனைந்து இதுவரை சேர்த்துள்ள  மூடிகளின் எண்ணிக்கை நூறு கோடியாம்.
ஹிட்லரின் புத்தகம்...
ஹிட்லரின் சுயசரிதை MEIN KAMF. அவர் தான் எழுதிய புத்தகத்தின் ஒரு பிரதியைத் தன்னிடம் வைத்திருந்தார். சமீபத்தில் அந்தப் புத்தகம் ஏலம் விடப்பட்டது. இருபதாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஐந்து டாலருக்கு ($20,655) ஏலம் போயிற்றாம்!
சுட்டெரித்தது...
கடந்த  ஜூலை மாதம் 21-ஆம் தேதி குவைத் நாடு ஒரு உலக ரிகார்டைத் தொட்டது. அந்த  நாட்டில் வெய்யில் உலைக்களமாக அனல் கக்கியது
  எத்தனை டிகிரி தெரியுமா129.2  டிகிரி பாரன்ஹீட்!
உயரப்  பறந்து  உயர்ந்தவர்
அமெரிக்க இரட்டை சகோதரர்கள் ஸ்காட் கெல்லியும் மார்க் கெல்லியும்  NASA-வின் விண்வெளி வீரர்கள். ஸ்காட் கெல்லி கிட்டத்தட்ட ஒரு வருடம் விண்வெளியில் பறந்துவிட்டுத் திரும்பினார். அவர் விண்வெளியில் இருந்த சமயத்தில் அவருடைய சகோதரர் மார்க் கெல்லியை, விண்வெளியிலிருக்கும் ஸ்காட் உண்பது, உறங்குவது போன்றே  இருக்கு மாறு செய்தார்கள்.
ஸ்காட் கெல்லி விண்ணிலிருந்து திரும்பிய பிறகு - அதாவது 5440 தடவை உலகைச் சுற்றி வந்துவிட்ட பிறகு, அவரது உயரத்தையும் மார்க் கெல்லியின் உயரத்தையும் அளந்தார்கள். ஒரு வருட காலத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் இருந்ததாலோ என்னவோ, மார்க் கெல்லியை விட இரண்டு அங்குலம்  அதிகமாக  ஸ்காட் கெல்லி வளர்ந்திருந்தார்.
விண்வெளியில் ஒரு வருஷம் பயணம் செய்த ஸ்காட் கெல்லி எத்தனை சூரிய உதயங்களைப் பார்த்தார் தெரியுமா? பத்தாயிரத்து எண்ணூற்று எண்பது (10,800)!
தள்ளுமுள்ளுதான்....
ஒரே தள்ளுமுள்ளு! எதற்கு? "விண்வெளி வீரர்கள் தேவை' என்று NASA  செய்த விளம்பரத்திற்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் தெரியுமா? பதினெட்டாயிரத்து  முன்னூறு பேர்.
நீண்ட சுருட்டு!
கியூபா அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு2016 ஆகஸ்ட் 13-ஆம் தேதி 90வது வயது பிறந்த நாளை ஒரு சுருட்டுக் கம்பெனி             வித்தியாசமாகக் கொண்டாடி யது.
 அவருக்காக ஒரு சிறப்பு சுருட்டைத் தயார் செய்தார்களாம். உலகிலேயே நீளமான சுருட்டு அதுநீளம் : 295 அடி.
(குறிப்பு: காஸ்ட்ரோ சுருட்டு பிடிப்பதை எப்போதோ நிறுத்தி விட்டார்).
நீண்ட ஆயுள்...
கிரீன்லாண்டில், வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள ஷார்க் மீன்கள் கிட்டத்தட்ட 400 வருடங்கள் வாழ்கின்றனவாம். உலகிலேயே நீண்ட ஆயுளைக் கொண்ட உயிரினங்களாம்!


July 15, 2017

குட்டித் துணுக்குகள்

என் பழைய நோட்டுப்புத்தகங்களில் கிடைத்த குட்டித் துணுக்குகள்.

உங்களுக்கு வெட்கமில்லை..?
அந்தக் காலத்தில்அதாவது எழுபதுகளில்அமெரிக்காவிலிருந்து ஒரு புத்தகம் வரவழைக்க வேண்டு மென்றால்பிரம்மபிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்நியச் செலாவணி சுலபமாகக் கிடைக்காது (டாலர் = ரூ.5 என்று   இருந்த காலம்).நான்பல அமெரிக்க எழுத்தாளர்களின்முக்கியமாக நகைச்சுவை எழுத்தாளர்களின்  விசிறி.
ஒரு சமயம் JACK PAAR என்ற காமெடியன் எழுதிய புத்தகம்,  தாரியா கஞ்ஜ் நடைபாதையில் கிடைத்தது. புத்தகம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஜேக் பார் எழுதிய மற்ற புத்தகங்களையும் படிக்க விரும்பினேன். டில்லி  புத்தகக் கடைகள் எதிலும் கிடைக்கவில்லை.திடீரென்று ஒரு யோசனை வந்தது. அமெரிக்கன் லைப்ரரிக்குச் சென்றுஜேக் பாரின் வீட்டு முகவரியைத் தேடிக் கண்டு பிடித்தேன். அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். "நான் உங்களுடைய விசிறி. உங்கள் மற்ற புத்தகங்களைப் படிக்க விரும்புகிறேன். உங்கள் புத்தகத்தை எனக்கு அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன். பழைய  புத்தகமாக  இருந்தாலும் சரி'' என்று எழுதினேன்
.

July 05, 2017

பரிவு மாமி- 2

வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு நாட்டுப்பெண் வர வேண்டும்” என்று நம் குடும்பங்களில் கூறப்படுவது உண்டு.
 மாமி புகுந்த வீட்டில் விளக்கேற்ற வேண்டிய அவசியமில்லை. வீட்டில் ஒரு அகல் விளக்காகவே அவர் விளங்கினார். நான் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. 
    அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் துளிக்கூடப் பாசாங்கு இல்லாத, இயல்பான அம்சமாகும். வேறு எந்த மாதிரியும் அவரால் இருக்க முடியாது. தான் தனிப்பிறவி என்றோ, மாதர்குல மாணிக்கம் என்றோ கருதிக் கொள்ள அவருக்குத் தெரியாது. இயல்பான எளிமைதான், அவருடைய Fair and Lovely க்ரீம்.
  மாமா ஒரு பள்ளி ஆசிரியர். சமூக சேவகர். மாமியிடம் முழுப் பொறுப்பையும் கொடுத்து விட்டு எளிமையாக, அலட்டல் இல்லாமல் “எல்லாம் அவள் பார்த்துப்பாள்” என்று இருப்பார். ஒதுங்கி இருக்க மாட்டார். பக்கபலமாக இருப்பார். அரவணைப்பாக இருப்பார்.
  குடும்பம் என்றால் நூறு பிரச்சனைகள் இருக்கும். ஒன்று போனால் ஒன்று வரும். கடல் அலை போல். அதுதான் வாழ்க்கை. பிரச்சினைகளை மனத் தெளிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரது வாழ்க்கை நெறிமுறை. மாமி என்ற தீபத்திற்கு அவர் எண்ணெய்.
ஆகா, ஒரு தம்பதி என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் என்று என்னை வியக்கச்  செய்தவர். அதனால் அவர்களை என் ஆதர்ச தம்பதியாகக் கருதத் தொடங்கினேன். பின்னால் எனக்குத் திருமணம் ஆனதும் அவர்களை எங்களது ‘ரோல் மாடல்’ என்று வைத்துக் கொண்டோம். அது எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் பல்வேறு முடிவுகளை, சிலசமயம் கடினமானவைகளையும் சில சமயம் எளிமையானவைகளையும் எப்படிக் கையாள்வது என்று புரியாமல்  குழம்பி நிற்கும் கணங்களில் இதை ‘மாமி’ எப்படிக் கையாண்டிருப்பார் என்று நாங்களே சிந்தித்து, நாங்களே அவர்கள் சார்பாக ஒரு ஆலோசனையை எங்களுக்குச் சொல்லிக் கொள்வோம். 

July 01, 2017

பரிவு மாமி

அறுபது வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் அந்தக் கணம் அப்படியே நினைவில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம்,  முகத்தில் புன்னகையையும், குரலில் பரிவையும், தோற்றத்தில் ஒரு பொலிவையும் கொண்ட பெரிய மாமி, “வாடாப்பா” என்று அழைத்த நேர்த்தி. அவர் என் பெரிய மாமாவின் மனைவி.
  சிறுவன் நான், முதன்முதலாக மாமாவைப் பார்க்கச் சென்னைக்கு வருகிறேன். ஜார்ஜ் டவுன்  சென்று என் தாத்தாவின் வீட்டின் வாயிற் கதவைத் தட்டுகிறேன். வீட்டின் பின்கட்டிலிருந்து வருகிறார் பெரிய மாமி. இன்னும் அந்த பட்டப் பெயர் அவருக்கு வரவில்லை. வீட்டின் மூத்த பிள்ளையின் மனைவிதான். பின்னால் அவரது மைத்துனன்களுக்குத் திருமணம் ஆனதும் மாமிக்குப் ‘பெரிய’   என்ற பட்டம் கிடைத்தது.
கதவைத் திறந்தபடியே ‘வாடாப்பா’ என்று அவர் பாசமுடன் அழைத்த பாங்கு என் மனதில் அந்தக் கணத்தை மறக்க முடியாத கணமாகச் செய்து விட்டது.
         இன்று மாமி இல்லை. ஆனால் அவரது நினைவுகள் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் என்னுள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. சில வருடங்களுக்குப் பிறகுதான், சற்று வளர்ந்து பெரியவனான பிறகுதான் மாமியின் பரிவு என்னுள் புரிந்த ஜாலத்தை உணர்ந்தேன். அதுவரை அவர் ‘எனக்குப் பிடித்த மாமி’ என்ற அளவில்தான். சென்னைக்கு வரும்போது அவரை சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு 30, 40 வருஷங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் குசலம் விசாரிக்கும் போதே நம்மை அன்பால் குளிப்பாட்டி விடுவார். கண், காது, மூக்கு மாதிரி புன்னகையும் அவர் முகத்தின் ஒரு நிரந்தர அம்சம்.
மாமனார், மாமியார், மைத்துனர்கள், நாத்தனார் என்று சற்றுப் பெரிய குடும்பம். சென்னைக்கு வரும் உறவினர்களக்கு அந்த வீடு, வசதியான தங்கும் விடுதி. எத்தனை பேர் வந்தாலும் மாமியின் முகத்தில் அலுப்போ சலிப்போ வராது. அவரது சாம்ராஜ்யம் சமையலறை. அந்த சமையலறை மேற்கூரையில் வெளிச்சம் வருவதற்காகப் பொருத்தப்பட்ட கண்ணாடி வழியாக சூரிய ஒளி  அடுப்பின்  முன் அவர் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் இடத்தின் மீது விழும். அப்போது அவரது வைர மூக்குத்தியும் வைரத் தோடும் ஒளிச் சிதறுலுடன் பளிச்சிடும். மாமியின் முகத்திற்கு அவை கூடுதல் நேர்த்தியை அளிக்கும்.
மைத்துனர்களுக்கு கலியாணம் ஆயிற்று. வீட்டிற்குப் புது மாட்டுப் பெண்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பெரிய மாமி, மூத்த நாட்டுப் பெண்ணாக இல்லாமல் உடன் பிறந்த சகோதரியாகத் திகழ்ந்தார். சமையல் செய்வது தனது உரிமை மாதிரி அவர் செய்து வந்தார். அது மட்டுமல்ல, யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும், ரிக் ஷாவை வரவழைத்து (தெருமுனையில் ரிக் ஷா ஸ்டாண்ட்) பக்கத்துத் தெரு டாக்டரிடம் அழைத்துப் போய் வருவார்.  எல்லா காரியங்களையும் இயல்பாகச் செய்வார்.